4773. புண்ணியந்தான் யாது புரிந்தேனோ நான்அறியேன்
பண்ணியதுன் போடே படுத்திருந்தேன் - நண்ணிஎனைத்
தூக்கி எடுத்தெனது துன்பமெலாந் தீர்த்தருளி
ஆக்கியிடென் றேயருள்தந் தாய்.
உரை: செய்த வினைகளால் உண்டாகிய துன்பத்தோடு ஒருபால் படுத்திருந்த என்னை, அருகில் வந்து இரு கைகளாலும் என்னைத் தூக்கியெடுத்து என்னுடைய துன்பங்கள் எல்லாவற்றையும் போக்கித் திருவருள் ஞானத்தைப் பெருக்கிக் கொள் என்று அருள் புரிந்தாய்; இந்தத் திருவருட் பேற்றுக்கு நான் என்ன புண்ணியம் செய்தேனோ அறிகிலேன். எ.று.
தாம் செய்த வினைகளால் தமக்குத் துன்பங்கள் எய்தினவையும் அதனால் தாம் வருந்தி ஓரிடத்தே படுத்திருந்தமை புலப்பட, “பண்ணிய துன்போடே படுத்திருந்தேன்” என்று பகர்கின்றார். துன்பத்தைப் போக்கிய இறைவன் மீளவும் அத்துன்பம் வந்து தாக்காதபடி பாதுகாப்பு அருளுவார் போலத் திருவருள் ஞானத்தைப் பெருக்கிக் கொள்க என்று சொல்லி அந்த ஞானத்தையும் தந்தருளினான் என்ற வரலாற்று உண்மை விளங்க, “எனது துன்பமெலாம் தீர்த்தருளி ஆக்கியிடு என்று அருள் தந்தாய்” என உரைக்கின்றார். அருள் - திருவருள் ஞானம். ஆக்கி இடல் - பெருக்கிக் கொள்ளுதல். துன்ப விருள் நீங்கினாலன்றி ஒளிப் பொருளாகிய திருவருளைப் பெருக்கிக் கொள்ள முடியாது என்பது கருத்து. அருள் ஞானப் பேறு புண்ணியம் செய்தார்க் கன்றி எய்தாது என்பது பற்றி, “புண்ணியந்தான் யாது புரிந்தேனோ” என்று புகல்கின்றார். (7)
|