4774. அஞ்சிஅஞ்சி ஊணும் அருந்தாமல் ஆங்கொருசார்
பஞ்சின் உழந்தே படுத்தயர்ந்தேன் - விஞ்சி அங்கு
வந்தாய் எனைத்தூக்கி மற்றொருசார் வைத்தமுது
தந்தாய்என் நான்செய் தவம்.
உரை: துன்பத்தால் மனம் மிகவும் அஞ்சி உணவும் உட்கொள்ளாமல் அவ்விடத்தே ஒருபால் பஞ்சி போல் துன்பப்பட்டுப் படுத்துக் கிடந்தேனாக, மேலூற்று வந்து என்னைத் தூக்கி வேறோர் மேலிடத்தே என்னை வைத்து எனக்கு உணவும் தந்தருளினாய்; நான் செய்த தவம்தான் என்னே. எ.று.
உணவு கொண்டால் துன்பம் மிகுமோ என்று அஞ்சி உண்ணாமல் இருந்தமை தோன்ற, “அஞ்சி அஞ்சி ஊணும் அருந்தாமல்” என்று உரைக்கின்றார். துன்பத்தால் தாம் பட்ட பாட்டை விளக்குதற்கு, “பஞ்சின் உழந்தே படுத்தயர்ந்தேன்” என்று கூறுகின்றார். தாமே மேலுற்று வந்தமையால் “விஞ்சி அங்கு வந்தாய்” என்று விளம்புகின்றார். உண்மை கண்டு உணவு தந்து ஓம்பினை விளங்க, “அமுது தந்தாய்” என்று உரைக்கின்றார். இறைவனது செயல் தாம் செய்த தவத்தால் விளைந்தது என்று தெளிகின்றாராதலால், “நான் செய்தவம் என்” என இயம்புகின்றார். (8)
|