4775. நானே தவம்புரிந்தேன் நானே களிப்படைந்தேன்
தேனே எனும்அமுதம் தேக்கஉண்டேன் - ஊனே
ஒளிவிளங்கப் பெற்றேன் உடையான் எனைத்தான்
அளிவிளங்கத் தூக்கிஅணைத் தான்.
உரை: தமது திருவுள்ளத்துப் பேரன்பு பிறங்கித் தோன்ற என்னைத் தூக்கி அணைத்தவனாகிய என்னை ஆளாகவுடைய சிவபெருமான் திருவருளால் தேன் போல் இனிக்கின்ற ஞான அமுதத்தை மிகவுண்டு என் உடம்பும் பொன்னொளி கொண்டு பொலியப் பெற்றேன்; ஆதலால் நான் மிகத் தவம் புரிந்தவனாயினேன்; அதனால் பெருமகிழ்ச்சி கொண்டேன். எ.று.
சிந்தையில் ஊறிய சிவஞானமாகிய அருளமுதம் தேனினும் இனிதாய் உண்டு தேக்கறிய பருகினமை புலப்பட, “தேனே எனும் அமுதம் தேக்கவுண்டேன்” என்று தெரிவிக்கின்றார். ஊன் உடம்பு இதனால் தமது திருமேனியின்கண் புத்தொளி தோன்றக் கண்டு வியக்கின்றமையின், “ஊனே ஒளி விளங்கப் பெற்றேன்” என்று உரைக்கின்றார். அளி - பேரன்பு. உடையான் - எல்லாம் உடைய சிவபெருமான். (9)
|