4776. வாழி எனைத்தூக்கி வைத்த கரதலங்கள்
வாழி எலாம்வல்ல மணிமன்றம் - வாழிநடம்
வாழி அருட்சோதி வாழிநட ராயன்
வாழி சிவஞான வழி.
உரை: கீழே தரையில் படுத்திருந்த என்னைத் தூக்கி வைத்த சிவபெருமானுடைய திருக்கைகள் வாழ்க; அவனுடைய அழகிய பொன்னம்பலம் வாழ்க; எல்லாம் செயல் வல்ல அவனது திருநடனம் வாழ்க; நடராசப் பெருமான் வாழ்க; அவனுடைய அருட் பெருஞ் சோதி வாழ்க; அவன் காட்டுகின்ற சிவஞானச் செம்மை நெறி வாழ்க. எ.று.
தன்னைத் தூக்கி மேலிடத்தே கிடத்திய சிவனுடைய திருக்கைகளை நினைந்து பாராட்டுகின்றாராதலால், “எனைத் தூக்கி வைத்த கரதலங்கள் வாழி” என்றும், வரம்பிலாத ஆற்றலுடையவன் நின்றாடும் பொன்னம்பல மாதலால் அவனது ஆற்றலை மன்றத்திற்கேற்றி, “எலாம் வல்ல மணி மன்றம் வாழி” என்றும் உரைக்கின்றார். (10)
|