98. அருட்கொடைப் புகழ்ச்சி
அஃதாவது, திருவருள் ஞானம் பெற்றமை குறித்து மனம் நிறைவுற்று யாது கைம்மாறு செய்வேன் என வியந்துரைப்பது.
அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 4777. கடையேன் புரிந்த குற்றமெலாம்கருதா தென்னுட் கலந்துகொண்டு
தடையே முழுதும் தவிர்த்தருளித் தனித்த ஞான அமுதளித்துப்
புடையே இருத்தி அருட்சித்திப் பூவை தனையும் புணர்த்திஅருட்
கொடையே கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
உரை: கீழ்மை யுடையவனாகிய யான் செய்த குற்றம் எல்லாவற்றையும் பொருளாக என்னாமல் என் உள்ளத்திற் கலந்துகொண்டு எனது அஞ்ஞான முழுதும் போக்கித் தனிச்சிறப்புடைய சிவஞானமாகிய அமுதத்தை எனக்களித்து தன் பக்கத்தில் இருக்க வைத்து அருள் ஞான சித்தியாகிய பெண்ணையும் எனக்கு மணஞ் செய்து வைத்தலாகிய அருட் கொடையை எனக்குப் புரிந்தருளினாய்; இதற்கு நான் யாது கைம்மாறு செய்வேன். எ.று.
கொடுக்கும் வள்ளலாகிய சிவபிரானை நோக்கத் தமது கீழ்ப்பட்ட தன்மை யுணர்வில் விளங்குதலால் வடலூர் வள்ளல் தம்மைக் “கடையேன்” என்று உரைக்கின்றார். உள்ளத்திற் கலந்து கொண்டதினால் தாம் செய்த குற்றமெல்லாம் பொறுத்துக் கொண்டமை இனிது விளங்குவதால், “கடையேன் புரிந்த குற்றமெலாம் கருதாது” என்று கூறுகின்றார். அஞ்ஞானம் உண்மை யுணர்வுக்குத் தடையாதலால் அதனைத் “தடை” என்று குறிக்கின்றார். ஞான அமுதத்தின் உயர்வு தோன்றி, “தனித்த ஞான வமுது” என்று சிறப்பிக்கின்றார். அருட்சித்தி என்பது திருவருள் ஞான சித்தி. அஃது எய்திய திறத்தை, “அருட்சித்திப் பூவைதனையும் புணர்த்தி” என்று புகல்கின்றார். உண்மை ஞானத்தை எய்துவிக்கும் நெறியைப் பெண்ணாக உருவகம் செய்து உரைப்பது ஞான நூல் மரபாதலால், “அருட் சித்திப் பூவை தனையும் புணர்த்தி” என்று உரைக்கின்றார். பூவை - பெண். “கேவல ஞானம் என்னும் கேள்கிளர் முலையிருளை பூவலர் எழுங்கப் புல்லி” (சீவக) என்று திருத்தக்க தேவர் கூறுவது காண்க. இதனை ஞான மணம் என்றும் கூறுபவாதலால் “அருட் கொடையே கொடுத்தாய்” என்று கூறுகின்றார். அருட் கொடை பெறற்கரிய பேறாதலின், “நின்றனக்குக் கைம்மாறு ஏது கொடுப்பேன்” என உரைக்கின்றார். (1)
|