4779. மருவும் உலகம் மதித்திடவே மரண பயந்தீர்த் தெழில்உறுநல்
உருவும் பொருள்ஒன் றெனத்தெளிந்த உணர்வும்என்றும் உலவாத
திருவும் பரம சித்திஎனும் சிறப்பும் இயற்கைச் சிவம்எனும்ஓர்
குருவும் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
உரை: இருந்து வாழ்கின்ற உலகத்தவர் அறிந்து நன்கு மதிக்குமாறு மரண பயம் எனக்கு உண்டாகாதபடி நீக்கி எழுச்சி நல்கும் நல்ல திருமேனியையும், பரம்பொருள் ஒன்றே எனத் தெளிந்த உணர்வையும், என்றும் கெடாத அருட் செல்வத்தையும், பரமசித்தி என்னும் சிறப்பையும், இயல்புடைய சிவம் எனப்படும் குருபரனையும் எனக்குக் கொடுத்தருளினாய்; ஆதலால் நினக்கு யாது கைம்மாறு செய்வேன். எ.று.
உலகத்தவர் அனைவரும் மரணத்துக்கு அஞ்சும் இயல்புடையவராதலால் அவர் மதிக்கும் பொருட்டு எனக்கு மரண பயம் இல்லாதபடிச் செய்தருளினாய் எனப் பாராட்டுகின்றாராதலால், “மருவும் உலகம் மதித்திடவே மரண பயம் தீர்த்து” என்றும், அப்பயமின்மை யாவரும் காண வள்ளற் பெருமானுடைய திருமேனி அமைந்திருந்த குறிப்பு விளங்க, “எழில் உருவும் கொடுத்தாய்” என்றும் இயம்புகின்றார். எக்காலத்தும் கெடாத மாண்புடையதாகலின் திருவருளாகிய ஞானச் செல்வத்தை, “என்றும் உலவாத திரு” என்று பகர்கின்றார். பரமசித்தி, கன்ம யோக சித்திகள் எல்லவாற்றிலும் மேன்மை சான்றதாதலால் ஞான சித்தியைப் “பரம சித்தி” என்று பகர்கின்றார். தன்வயத்தனாதல் என்றும் குண வுருவினனாதலால் சிவத்தை, “இயற்கைச் சிவம்” எனவும், அச்சிவ பரம்பொருளே தவத்தால் பக்குவம் எய்திய பெருமக்களுக்குக் குருமூர்த்தியாய் அருள் ஞானம் வழங்கும் இயல்புடையவனாதல் பற்றி, “இயற்கைச் சிவம் எனும் ஓர் குருவும் கொடுத்தாய்” எனவும் எடுத்தோதுகின்றார். (3)
|