4780. சேட்டித் துலகச் சிறுநடையில் பல்கால் புகுந்து திரிந்துமயல்
நீட்டித் தலைந்த மனத்தைஒரு நிமிடத் தடக்கிச் சன்மார்க்கக்
கோட்டிக் கியன்ற குணங்கள்எலாம் கூடப் புரிந்து மெய்ந்நிலையைக்
காட்டிக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
உரை: உலக வாழ்வின் சிறுமை பொருந்திய ஏக்கத்தில் சிறு செயல்கள் பலவற்றை மேற்கொண்டு அலைந்து மயக்கம் மிகுந்து அலைந்த என் மனதை ஒரு நிமிடத்தில் அடக்கிச் சன்மார்க்கச் சங்கத்துக்குப் பொருந்திய குணஞ் செயல்கள் யாவையும் மிகவும் செய்து மெய்ம்மை நிலையைக் காணும் நலத்தை அருளினாயாதலால் உனக்கு யான் யாது கைம்மாறு செய்வேன்.
உலகியல் வாழ்வு சிறுமை பயப்பது பற்றி, “உலகச் சிறுநடை” என்று கூறுகின்றார். சேட்டை என்னும் சொல் சொல்லடியாகச் சேட்டித்தல் என்னும் வினை வழங்குகிறது. சேட்டித்தல் - சிறுசெயல் செய்தல். சன்மார்க்க சங்கத்தைச் “சன்மார்க்கக் கோட்டி” என்று சொல்லுகின்றார். உண்மை ஞான நிலையை மெய்ந்நிலை என்று எய்துவித்தாய் என்பதைக் “காட்டிக் கொடுத்தாய்” என்று உரைக்கின்றார். (4)
|