4781.

     தோலைக் கருதித் தினந்தோறும் சுழன்று சுழன்று மயங்கும்அந்த
     வேலைக் கிசைந்த மனத்தைமுற்றும் அடக்கி ஞான மெய்ந்நெறியில்
     கோலைத் தொலைத்துக் கண்விளக்கம் கொடுத்து மேலும் வேகாத
     காலைக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.

உரை:

     மகளிர் மேனியழகை நினைந்து நாள்தோறும் அவர் சூழலில் திரிந்து மயங்கும் அந்த இழிசெயலுக்கு இசைந்து திரிந்த மனத்தை முற்றிலும் அடக்கி உண்மை ஞான நிலையில் செல்லுதற் கேற்ற ஞானக் கண்ணைக் கொடுத்து அதன் மேல் யோகாக்கினியை எனக்குக் கொடுத்தருளினாய்; இதற்கு யான் யாது கைம்மாறு செய்தேன். எ.று.

     மகளிரின் மேனியழகு அவன் உடலின் தோல் மேல் நிற்றலால், “தோலைக் கருதி” என்று சொல்லுகின்றார். காம மயக்குற்றுத் திரியும் செயலை, “மயங்கும் அந்த வேலை” என்று குறிக்கின்றார். கோலூன்றித் திரியும் குருடர்க்குக் கண் விளக்கம் வந்தபோது ஊன்று கோலை வேண்டாதது போல மகளிர் மயக்கத்தில் ஊன்றுகோலாகாக் கொண்டு திரிந்த அஞ்ஞானம் ஞான மெய்தியவிடத்து விடுபடுவது போல, ஞானக் கண் பெற்ற திறத்தை, “ஞான மெய்ந்நெறியில் கோலைத் தொலைத்துக் கண் விளக்கம் கொடுத்து” என்று இசைக்கின்றார். வேகாத கால் என்று யோக நெறி மெய்ஞ்ஞானம் அருளி அது நீங்காமை பொருட்டு யோக நெறி அருளப்பட்டமை இதனால் தெரிவிக்கின்றார்.

     (5)