4782.

          பட்டிப் பகட்டின் ஊர்திரிந்து பணமே நிலமே பாவையரே
          தெட்டிற் கடுத்த பொய்ஒழுக்கச் செயலே என்று திரிந்துலகில்
          ஒட்டிக் குதித்துச் சிறுவிளையாட் டுஞற்றி யோடும் மனக்குரங்கைக்
          கட்டிக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.

உரை:

     பட்டி எருதின் மேல் இவர்ந்து திரிவதுபோல இளமைச் செருக்கு மேற்கொண்டு பொன்னிற நிலத்தையும் பெண்களையும் ஏய்த்துக் கவர்ந்துகொள்ளும் செயலாம் என்று பொய் ஒழுக்கத்தைக் கைக்கொண்டு பலவேறு இடத்திலும் திரிந்து தாவிக் குதித்துச் சிறு விளையாட்டு செய்யும் குரங்கு போன்ற என் மனத்தை அடக்கிக் கொள்ள உதவினாய்; ஆதலால் உனக்கு யான் யாது கைம்மாறு செய்வேன். எ.று.

     பட்டிப் பகடு - கட்டுக் கடங்காது திரியும் காளை மாடு. இங்கே அது குறிப்பாய் இளமைச் செருக்கைக் குறிக்கின்றது. தெட்டுதல் - ஏமாற்றுதல். பணம், பொருள், நிலம், மகளிர் என்ற ஆசை மேற் கொண்டு அம்மூன்றும் பெறக் கருதிப் பொய் புரிந்து ஒழுகுதலை, “பணமே நிலமே பாவையரே தெட்டிற் கடுத்த பொய்வொழுக்கச் செயல்” என்று புகல்கின்றார். மரக் கொம்புகளில் தாவிக் குதித்து விளையாடும் குரங்கு போல்வது பற்றி, பணம் நிலம் முதலிய பொருள் மேல் ஆசை யுற்றுத் தாவிச் செல்லும் மனத்தை, “மனக்குரங்கு” என்று பழிக்கின்றார். கட்டிக் கொடுத்தலாவது ஒருமுகப்படுத்தி நிறுத்தல். 

     (6)