4783. மதியைக் கெடுத்து மரணம்எனும் வழக்கைப் பெருக்கி இடர்ப்படும்ஓர்
விதியைக் குறித்த சமயநெறி மேவா தென்னைத் தடுத்தருளாம்
பதியைக் கருதிச் சன்மார்க்கப் பயன்பெற் றிடஎன் உட்கலந்தோர்
கதியைக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
உரை: தனக்குரிய அறிவைத் தந்து பிறப்பிறப்பென்னும் கருத்துக்களைப் பெருக நினைப்பித்து வருத்துகின்ற ஊழ்வினையைப் பாலித்துரைக்கும் சமய நெறிக்கண் செல்லாதபடி என்னைத் தடுத்து திருவருள் உருவாகிய சிவபதியை நினைந்து சன்மார்க்க நெறியின் விளைவாகிய ஞானத்தைப் பெற என் உள்ளத்தில் கலந்துகொண்டு ஒப்பற்றதொரு நன்னெறியைத் தந்தருளினாய்; இதற்கு நான் யாது கைம்மாறு செய்வேன். எ.று.
ஊழ்வினை வந்து தாக்குகிற பொழுது அதற்கேற்ப அறிவைத் திரிபு படுத்துதலால், “மதியைக் கெடுத்து” என்று உரைக்கின்றார். பிறப்பிறப்புக்களைப் பற்றியே பெரிதும் பேசுவதால் வாழ்வார்க்கு வாழ்வின்கண் ஊக்கம் குறைவது பற்றி, “மரணம் எனும் வழக்கைப் பெருக்கி இடர்ப்படும் ஓர் விதி” என்றும், அதுவே பொருளாகச் சமய நெறியை விலக்குதற்கு, “விதியைக் குறித்த சமய நெறி மேவாது என்னைத் தடுத்து” என விளம்புகிறார். அருளாம் பதி - அருளுருவாகிய சிவபெருமான். சன்மார்க்கப் பயன், - சன்மார்க்கத்தால் விளையும் திருவருள் ஞானமாகிய பயன், கதியை அடைதற்குரிய நெறியைக் “கதி” என்று உபசரிக்கின்றார். (7)
|