4784.

     தருண நிதியே என்னொருமைத் தாயே என்னைத் தடுத்தாண்டு
     வருண நிறைவில் சன்மார்க்கம் மருவப் புரிந்த வாழ்வேநல்
     அருண ஒளியே எனச்சிறிதே அழைத்தேன் அழைக்கும் முன்வந்தே
     கருணை கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.

உரை:

     சமயத்தில் கிடைத்த செல்வமே! என்னுடைய ஒப்பற்ற தாயே! என்னைத் தடுத்து ஆட்கொண்டு பூரண நிறைவுடைய சன்மார்க்கத்தை மேற்கொண்டு என்னை வாழ்வித்த பெருமானே! நல்ல ஞானச் சூரிய ஒளியே என்று புகழ்ந்து சிறிதுபோது ஓதி அழைத்தேனாக அதற்குள் என்பால் வந்து அருள் ஞான ஒளி வழங்கினாய்; ஆதலால் நான் யாது கைம்மாறு செய்வேன். எ.று.

     தருணம் - சமயம். ஒப்பற்ற தாய் என்றற்கு, “ஒருமைத் தாயே” என வுரைக்கின்றார். உலகியற் போக்கில் தமது கருத்துச் செல்லாமை பற்றி, “தடுத்தாண்டு” என மொழிகின்றார். வருணம் - உயர்வு. சன்மார்க்கத்தில் வாழ்விப்பது பற்றி, “வாழ்வே” எனக் கூறுகின்றார். அருண ஒளி - சிவந்த சூரிய வொளி; ஈண்டு ஞான சூரிய வொளி மேற்று. கருணை - திருவருள்

     (8)