4785.

          பொற்பங் கயத்தின் புதுநறவும் சுத்த சலமும் புகல்கின்ற
          வெற்பந் தரமா மதிமதுவும் விளங்கு பசுவின் தீம்பாலும்
          நற்பஞ் சகமும் ஒன்றாகக் கலந்து மரண நவைதீர்க்கும்
          கற்பம் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.

உரை:

     அழகிய தாமரை மலரிடத்து ஊறும் புதுத் தேனும், சுத்த நீரும், புகழ்ந்தோதப்படுகின்ற ஆஞ்ஞையென்றும் ஆதாரமாகிய மலை மேல் விளங்குகின்ற மதியினிடத்தொழுகும் மதுவும், பசும்பாலும், கோமலமும் ஆக ஐந்தும் ஒன்றாகக் கலந்து மரண நோயைத் தடுக்கும் காய கற்பம் என்ற மருந்தைக் கொடுத்தருளினாய்; இதற்கு யாது கைம்மாறு செய்வேன். எ.று.

     பொற்பங்கயம் - அழகிய தாமரை. யோக நூல் கூறுகின்ற ஆறு ஆதாரங்களின் மேலதாகிய ஆஞ்ஞை என்பதை மலையாக உருவகம் செய்து “ஓதுகின்ற வெற்பு” என்று விளம்புகின்றார். இதனை “யோக வெற்பு” என்றும் வழங்குவர்; இதன் உயரம், தலையுச்சிக்கு மேல் பன்னிரண்டங்குலம் என்பர்; துவாத சாந்தம் என்பதும் இதனையே என அறிக. பஞ்ச கவ்வியத்துள் ஒன்றாகிய கோசரணம் பஞ்சகம் எனப்படுகிறது. கற்பம் - உயர்ந்த மருந்து. உடம்பைக் கெடாமல் காக்கும் மருந்தைக் காயகற்பம் என வழங்குவர்.

     (9)