4786. புலையைத் தவிர்த்தென் குற்றமெலாம் பொறுத்து ஞான பூரணமா
நிலையைத் தெரித்துச் சன்மார்க்க நீதிப் பொதுவில் நிருத்தமிடும்
மலையைக் காட்டி அதனடியில் வயங்க இருத்திச் சாகாத
கலையைக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
உரை: புலால் உண்ணும் குற்றத்தை நீக்கி, வேறான பொய் முதலிய குற்றங்களைப் பொறுத்தருளிப் பூரண ஞானமாகிய நிலையைத் தெரிவித்துச் சன்மார்க்க நீதியே நிலவுகின்ற அம்பலத்தின்கண் திருக் கூத்தியற்றும் திருவடியாகிய மலையை எனக்கு காட்டி அதனடியில் எளியேன் விளங்க இனிதிருத்திச் சாகாமைக் கேதுவாகிய கலைஞானத்தையும் எனக்குத் தந்தருளினாய்; இதற்கு யான் யாது கைம்மாறு செய்வேன். எ.று.
புலை - புலாலுண்ணும் குற்றம். பரஞான மெய்ந்நிலை, “ஞான பூரணமாம் நிலை” எனப்படுகிறது. அடைதற் கருமை பற்றி, இறைவன் திருவடியை, “மலை” என்கின்றார். வயங்குதல் - விளங்குதல். ஆகாசத்தைக் குறிக்கும் சாகாத் தலையும், வாயுவைக் குறிக்கும் வேகாக் காலையும் அக்கினியைக் குறிக்கும் போகாப் புனலையும் “சாகாக் கல்வி” யென உபதேசப் பகுதி கூறுகின்றது. (10)
|