4787.

    அருணா டறியா மனக்குரங்கை அடக்கத் தெரியா ததனொடுசேர்ந்
     திருணா டனைத்தும் சுழன்றுசுழன் றிளைத்துக் களைத்தேன் எனக்கந்தோ
     தெருணா டுலகில் மரணம்உறாத் திறந்தந் தழியாத் திருஅளித்த
     கருணா நிதியே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.

உரை:

     அருளியல்பை அறியாத மனக்குரங்கை அடக்கியாளத் தெரியாமல் அதனோடு சேர்ந்துகொண்டு துன்பம் தரும் சூழல்கள் எல்லாவற்றிலும் சுழன்று திரிந்து இளைப்புற்று மெலிந்து திரிந்த எனக்குத் தெளிவமைந்த நல்லுலகில் மரண பயமில்லாத சிறப்பைத் தந்து அழியாத அருட் பேற்றினை எனக்கு அளித்தருளிய கருணாநிதியாகிய பெருமானே! உனக்கு யான் யாது கைம்மாறு செய்வேன். எ.று.

     அருள் - அருளறத்தின் சிறப்பியல்பு. இருள்நாடு - துன்பம் விளைவிக்கும் சூழல்கள். தெருள்நாடு - ஞான ஒளி நிலவும் சான்றோர் உறையும் இடம். மரணமுறாத் திறம் - மரண பயமில்லாத வாழ்வு. திருவருளாகிய செல்வத்தை உடையவனாதலால் சிவனைக் கருணா நிதியே” என்று போற்றுகின்றார். இதனால், மனம் போன போக்கிற் சென்று துன்பத்திற்கு இரையாகி மெலிந்த எனக்கு அருள் ஞான ஒளி வழங்கி மரணமிலாப் பெருவாழ்வை அளித்தாய்; ஆதலின் யான் உனக்கு யாது கைம்மாறு செய்வேன் என்பது கருத்து.

     (11)