4788. மண்ணுள் மயங்கிச் சுழன்றோடு மனத்தை அடக்கத் தெரியாதே
பெண்ணுள் மயலைப் பெருங்கடல்போல் பெருக்கித் திரிந்தேன் பேயேனை
விண்ணுள் மணிபோன் றருட்சோதி விளைவித் தாண்ட என்னுடைய
கண்ணுள் மணியே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
உரை: மண்ணக வாழ்வில் மயங்கிப் பல்வேறு சூழலில் சுழன்றலையும் மனதை அடக்கத் தெரியாமல் பெண்கள் மேல் உண்டாகும் காம மயக்கத்தைப் பெரிய கடல்போல் பெருக வளர்த்துத் திரிந்து கிடந்த பேய் போன்றவனாகிய என்னை விண்ணுலகத்து மணிபோல உயர்த்தி என்பால் அருட் சோதியை உண்டாக்கி ஆண்டருளிய என்னுடைய கண்மணி போன்ற இறைவனாகிய நினக்கு யான் யாது கைம்மாறு செய்வேன் எ.று.
மண் என்பது மண்ணக வாழ்வில் உளதாகும் மயக்கம். பெண்ணுள் மயல் - பெண்களின்மேல் உண்டாகும் காம மயக்கம். விண்ணுள் மணி - தேவர் உலகத்துப் பெறலாகும் மணி. அருட் சோதி - திருவருள் ஞான ஒளி. (12)
|