4789.

   புலந்த மனத்தை அடக்கிஒரு போது நினைக்க மாட்டாதே
   அலந்த சிறியேன் பிழைபொறுத்தே அருளார் அமுதம் அளித்திங்கே
   உலந்த உடம்பை அழியாத உடம்பாப் புரிந்தென் உயிரினுளே
   கலந்த பதியே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.

உரை:

     அடங்காமல் பிணங்கித் திரிந்த மனத்தை அடக்கி உன் திருவடியை ஒருசிறிது போதும் நினைக்காமல் வருந்திய சிறுமையுடையவனாகிய என்னுடைய குற்றங்களைப் பொறுத்து, திருவருள் ஞானமாகிய அமுதத்தை எனக்களித்து, இவ்வுலகில் மெலிந்த என் உடம்பை அழிதல் இல்லாத பொன் உடம்பாக்கி என் உயிர்க்குட் கலந்துகொண்ட பெருமானே, நினக்கு யான் யாது கைம்மாறு செய்வேன். எ.று.

     புலந்த மனம் - அடங்காது பிணங்கித் திரியும் மனம். அலந்த சிறியேன் - வருந்தின சிறுமையுடையவன். உலந்த உடம்பு - வற்றிய உடம்பு. திருவருள் ஞானத்தால் பொன்னிறங் கொண்டு பொலியும் உடம்பைப் பெற்றமை தோன்ற, “அழியாத உடம்பாப் புரிந்து” என்று கூறுகின்றார். உயிர்க்குயிராய்க் கலந்துகொள்ளுதல் இறைவன் இயல்பாதலின், “உயிரினுள்ளே கலந்த பதியே” என்று போற்றுகின்றார்.

     (13)