4790. தனியே கிடந்து மனங்கலங்கித் தளர்ந்து தளர்ந்து சகத்தினிடை
இனியே துறுமோ என்செய்வேன் எந்தாய் எனது பிழைகுறித்து
முனியேல் எனநான் மொழிவதற்கு முன்னேகருணை அமுதளித்த
கனியே கரும்பே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
உரை: தனியே இருந்து மனம் கலங்கி மிகவும் தளர்ந்து உலக வாழ்வில் இது எத்தகைய துன்பம் உண்டாகுமோ; யான் யாது செய்வேன்; எந்தையே! எனது குற்றங்களைப் பொருளாக எண்ணி என்னை வெறுக்க வேண்டாம் என்று நான் வாய் திறந்து சொல்லுதற்கு முன்னே அருள் ஞானமாகிய அமுதத்தை அளித்தருளிய பழுத்த பழம் போன்றவனே! கரும்பு போல் இனிப்பவனே! உன்னுடைய திருவருட்கு யான் யாது கைம்மாறு செய்வேன். எ.று.
உலகவர் தொடர்பை உள்ளத்திற் துறந்து நின்று உலகியல் துன்பங்களை நினைந்து வருந்துகின்றாராதலால் வடலூர் வள்ளல், “தனியே கிடந்து மனம் கலங்கி” என்றும், துன்பங்கள் செய்யும் குற்றங்கள் வாயிலாகத் தொடர்ந்து வருவது பற்றி, “சகத்தினிடை இனி ஏதுறுமோ என்செய்வேன்” என்றும் வருந்துகிறார். முனிதல் - வெறுத்தல். திருவருள் ஞானத்தைக் “கருணை யமுது” எனக்குறிக்கின்றார். (14)
|