4791.

          பெண்ணே பொருளே எனச்சுழன்ற பேதை மனத்தால் பெரிதுழன்று
          புண்ணே எனும்இப் புலைஉடம்பில் புகுந்து திரிந்த புலையேற்குத்
          தண்ணேர் மதியின் அமுதளித்துச் சாகா வரந்தந் தாட்கொண்ட
          கண்ணே மணியே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.

உரை:

     பெண் என்றும் பொருள் என்றும் ஆசை கொண்டு அலைகின்ற பேதைத் தன்மையை யுடைய உனக்கு நான் மிகவும் வருந்தி உண்டென்று சொல்லக்கூடிய புலால் நாற்றம் நாறுகின்ற இவ்வுடம்பினுள் புகுந்து வருந்துகின்ற புலையனாகிய எனக்குக் குளிர்ச்சி பொருந்திய அமுதச் சந்திரனுடைய ஞானாமிர்தத்தை அளித்தருளிச் சாகா வரத்தையும் தந்து ஆட்கொண்டருளிய என்னுடைய கண்ணும் மணியும் போன்றவனே! இவ்வருட் செயலுக்கு யான் யாது கைம்மாறு செய்வேன். எ.று.

     பெண்ணாசையாலும் பொருளாசையாலும் பேதுறவு கொண்டு அலைந்தமை புலப்பட, “பெண்ணே பொருளே எனச் சுழன்ற பேதை மனத்தால் பெரிதுழன்று” என்று உரைக்கின்றார். பேதை மனம் - பயனின்றி உழைக்கும் தன்மையையுடைய மனம். உழலுதல் - வருந்துதல். தோலால் மறைக்கப்பட்ட புண் போல்வதால் உடம்பை, “புண்ணே எனும் இப்புலை உடம்பு” என்றும், புலை உடம்பைத் தாங்குவதால் தம்மைப் “புலையன்” என்றும் புகல்கின்றார். யோகிகட்குத் துவாத சாந்தத்தில் காட்சி தரும் அமுத சந்திரனை, “தண்ணேர் மதி” என்று சிறப்பிக்கின்றார். பெறற்கரிதாகிய சாகா வரத்தை தந்தமையால் உனக்குக் கைம்மாறு தருதற்கு என்பால் ஒன்றுமில்லை என்பாராய், “நின்றனக்கு கைம்மாறு ஏது கொடுப்பேனே” என்று

     (15)