4792. பொருத்திக் கொடுத்த புலைஉடம்பில் புகுந்தேன் புணைத்தற் கிணங்காத
எருத்தில் திரிந்தேன் செய்பிழையை எண்ணா தந்தோ எனைமுற்றும்
திருத்திப் புனித அமுதளித்துச் சித்தி நிலைமேல் சேர்வித்தென்
கருத்தில் கலந்தோய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
உரை: பொருத்தமுற அமைத்துக் கொடுக்கப்பட்ட புலால் நாறும் உடம்பில் புகுந்துகொண்டு பிணைத்தற்கு அடங்காத எருது போல் அலைந்து திரிகின்ற யான் செய்த குற்றங்களைப் பொருளாக என்னாமல் என்பால் இரக்கமுற்று என்னை முழுவதும் திருத்தித் தூயதாகிய அருளமுதை அளித்து ஞான சித்தியாகிய மேல்நிலையில் சேர்ப்பித்து என் உள்ளத்தினுள் கலந்துகொண்ட பெருமானாகிய உனக்கு யான் யாது கைம்மாறு செய்வேன். எ.று.
எல்லா உறுப்புக்களும் இனிது அமைந்திருத்தலின் தமது உடம்பை, “பொருத்திக் கொடுத்த உடம்பு” என்றும், புலால் நாறுவது இயல்பாக உடைமையின், “புலை உடம்பு” என்றும் புகல்கின்றார். புணைத்தல் - பிணித்தல்; இணைத்தலுமாம். நான்கைந்து எருதுகளை இணைத்து வைக்கோல் மேலேற்றிச் சுழல நடப்பித்தல் புணையிடுதல் என்பது வழக்காதலின் அச்செயலுக்குப் பொருந்தாத எருதை, “புணைத்தற் கிணங்காத எருது” என்று உரைக்கின்றார். திருவருள் ஞானத்தைப் “புனித அமுது” என்று புகல்கின்றார். ஞான சித்திக்கு அப்பாற்பட்ட சித்தி நிலையைச் “சித்தி நிலை” என்று சிறப்பிக்கின்றார். கன்ம யோகங்களுக்கு மேல்நிலை ஞான சித்தி நிலையென அறிக. (16)
|