4793. பெண்ணுக் கிசைந்தே பலமுகத்தில் பேய்போல் சுழன்ற பேதைமனத்
தெண்ணுக் கிசைந்து துயர்க்கடலாழ்ந் திருந்தேன் தன்னை எடுத்தருளி
விண்ணுக் கிசைந்த கதிர்போல்என் விவேகத் திசைந்து மேலும்என்தன்
கண்ணுக் கிசைந்தோய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.
உரை: பெண்ணாசை கொண்டு பல வழிகளில் பேய் போல் சுழன்று அலைந்த பேதைத் தன்மையையுடைய மனத்தின்கண் எழுகின்ற ஆசைகட்கு உட்பட்டுத் துன்பக் கடலில் மூழ்கி வருந்திய என்னை எடுத்தாண்டு வானத்தில் விளங்கும் ஒளி போன்று என் அறிவிற் கலந்து கொண்டு அதன்மேல் என் கண்களாலும் காண்பதற்கு இசைந்தருளினாய்; உனக்கு யான் யாது கைம்மாறு செய்வேன். எ.று.
பெண்ணாசையைப் “பெண்” என்று உரைக்கின்றார். துன்பத்தை மேற்கொண்டு இன்பத்தைக் கைவிடும் தன்மையுடைமை பற்றி மனதை, “பேதை மனம்” என்று பேசுகின்றார். மனத்து எண்ணுக்கு இசைதல் - மனத்தில் எழுகின்ற ஆசைகளுக்கு இசைந்து ஒழுகுதல். தமது அறிவின்கண் விளங்குகின்ற திருவருள் ஞான ஒளியை நீல வானத்தில் ஒளிரும் சூரியனைக் காட்டி விளக்குகின்றாராதலால், “விண்ணுக்கு இசைந்த கதிர் போல் என் விவேகத்து இசைந்து” என்று விளம்புகின்றார். விவேகம் - தெளிந்த அறிவு. (17)
|