4794.

          மாட்சி அளிக்கும் சன்மார்க்க மரபில் மனத்தைச் செலுத்துதற்கோர்
          சூழ்ச்சி அறியா துழன்றேனைச் சூழ்ச்சி அறிவித் தருளரசின்
          ஆட்சிஅடைவித் தருட்சோதி அமுதம் அளித்தே ஆனந்தக்
          காட்சி கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.

உரை:

     மாண்பு பொருந்திய சன்மார்க்க நெறியில் மனத்தைச் செலுத்துவதற்குரிய அறிவறியாமல் வருந்திக் கிடந்த எனக்கு அறிவு தந்து அருள் ஞான அரசின் அருளொளியில் என்னைப் புகுவித்து திருவருட்சோதியாகிய ஞானாமிர்தத்தை எனக்கு தந்து இன்ப மயமான சிவானந்த காட்சியை எனக்கு நல்கினாய்; ஆதலால் யான் நினக்கு யாது கைம்மாறு செய்வேன். எ.று.

     மாட்சி - மாண்பு; அஃதாவது ஞானத்தால் விளையும் உயர்வு. சன்மார்க்கநெறி இங்கே “சன்மார்க்க மரபு” எனப்படுகிறது. சூழ்ச்சி - வழி; ஈண்டு அறிவு மேற்று. நுண்ணிய அறிவின்றித் திருவருள் அரசை அடைய முடியாதாகலின், “சூழ்ச்சி அறிவித்து அருளரசின் ஆட்சி அடைவித்து” எனவும், அருளமுதம் உண்டார்க்கன்றிச் சிவானந்தக் காட்சி கிடைக்காதென்பது புலப்பட, “அருட்சோதி அமுதம் அளித்து ஆனந்தக் காட்சி கொடுத்தாய்” எனவும் இயம்புகின்றார்.

     (18)