4795. பொய்யிற் கிடைத்த மனம்போன போக்கில் சுழன்றே பொய்உலகில்
வெய்யிற்கிடைத்த புழுப்போல வெதும்பிக் கிடந்த வெறியேற்கு
மெய்யிற் கிடைத்தே சித்திஎலாம் விளைவித் திடுமா மணியாய்என்
கையிற் கிடைத்தோய் நின்தனக்குக் கைம்மா றேதுகொடுப்பேனே.
உரை: பொய் யுருவில் அமைந்த என் மனம் போன போக்கிலே சென்று அலைந்து நிலையற்ற உலக வாழ்வில் வெயிலில் விழுந்த புழுப்போல வெம்பிக் கிடந்த அறிவில்லாத எனக்கு மெய்ம்மை யுருவாகிய சித்திகள் யாவற்றையும் விளைவிக்கும் பெரிய மணியாய் என் கைக்குக் கிடைத்த பெருமானே! நினக்கு யாது கைம்மாறு செய்வேன். எ.று.
பொய்யே உருவாய் அமைந்தது என்றற்குப் “பொய்யிற் கிடைத்த மனம்” எனப் புகல்கின்றார். மனம் சென்ற உலகியலும் நிலையில்லாத தாகலின், “பொய்யுலகு” என்று கூறுகின்றார். வெய்யில் - வெயில் எனவும் வழங்கும். வெறியேன் - சிறப்புடைய தெளிந்த அறிவில்லாதவன். கையிற் கிடைத்த மணிபோல் எனக்கு அமைந்தனை என்பது கருத்து. (19)
|