4796.

          போதல் ஒழியா மனக்குரங்கின் போக்கை அடக்கத் தெரியாது
          நோதல் புரிந்த சிறியேனுக் கிரங்கிக் கருணை நோக்களித்துச்
          சாதல் எனும்ஓர் சங்கடத்தைத் தவிர்த்தென் உயிரில் தான்கலந்த
          காதல் அரசே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.

உரை:

     நீங்குதல் இல்லாத என் மனமாகிய குரங்கின் செயலை யடக்கி யாளத் தெரியாமல் வருந்திக் கிடந்த சிறியவனாகிய என்பால் மனமிரங்கி அருட் பார்வை செய்து மரணம் என்னும் துன்பத்தைப் போக்கி என் உயிரோடுயிராய்க் கலந்துகொண்டாய்; எனக்கு அன்புடைய அரசே, நினக்கு யான் யாது கைம்மாறு செய்வேன். எ.று.

     போதல் - நீங்குதல். போக்கு - செயல் வகைகள். நோதல் புரிதல் - வருந்துதல். கருணை நோக்கு - திருவருள் நாட்டம். சங்கடம் - துன்பம். மரணபயத்தைப் போக்கி யருளினமைக்கு யாது கைம்மாறு செய்வேன் என்பது கருத்து.

     (20)