4798.

          படைத்தல்முதல் ஐந்தொழில்செய் பணிஎனக்கே பணித்திட்டாய்
          உடைத்தனிப்பேர் அருட்சோதி ஓங்கியதெள் ளமுதளித்தாய்
          கொடைத்தனிப்போ கங்கொடுத்தாய்நின் அடியர் குழுநடுவே
          திடத்தமர்த்தி வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.

உரை:

     ஞான சபையில் நடனம் புரிந்தருளும் பெருமானே! படைத்தல் முதலிய தொழில்கள் ஐந்தினையும் புரியும் செயலை எனக்கு அருளி இருக்கின்றாய் நின்னுடைய ஒப்பற்ற பெரிய அருட் சோதியாகிய உயர்ந்த தெள்ளிய அமுதத்தை எனக்குத் தந்தருளினாய்; அதனைப் பிறர்க்கு ஈந்து மகிழும் இன்பத்தையும் எனக்குக் கொடுத் தருளினாய்; நின்னுடைய அடியார் கூட்டத்தின் நடுவே அசைவற அமர்த்தி என்னை வளர்த்தருளுகின்றாய்; என்னே நின் அருட் கொடை இருந்தவாறு. எ.று.

     படைத்தல் முதல் ஐந்தொழில்களாவன : படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பன. பணி இரண்டனுள் செய் பணியாவது செய்தொழில். பணித்திடல் - கட்டளையிடுதல். அருட் சோதியாகிய சிவஞானம் சிவனுக்கே உரிய உடைமைப் பொருளாதலால், “உடைத் தனிப் பேரருட் சோதி” என்று உரைக்கின்றார். ஈத்துவக்கும் இன்பம் “கொடைத் தனிப் போகம்” எனப்படுகிறது. சிவனடியார் உள்ளத்தில் சிவம் எழுந்தருளுவதால் அவர் நடுவே இருத்தல் சிவத்தின்பால் இனிது இருத்தலாம் என்பது பற்றி, “நின் அடியர் குழு நடுவே திடத்தமர்த்தி வளர்க்கின்றாய்” என்று தெரிவிக்கின்றார். திடத்தமர்தல் - அசைவின்றி இருத்தல்.

     (2)