4800. ஐவர்செயும் தொழில்எனக்கே அளித்தாய்நின் அருளமுதென்
கைவரச்செய் துண்ணுவித்தாய் கங்கணம்என் கரத்தணிந்தாய்
சைவர்எனும் நின்னடியார் சபைநடுவே வைத்தருளித்
தெய்வம்என்று வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
உரை: பிரமன் முதலிய தேவர்கள் ஐவரும் செய்யும் படைத்தல் முதலிய தொழில் ஐந்தையும் எனக்குத் தந்தருளி நின்னுடைய திருவருளாகிய அமுதத்தை என் கையில் தந்து உண்பித்ததோடு கங்கணம் ஒன்றையும் என் கையில் அணிந்து சைவர்கள் என்று சிறப்பிக்கப்படும் அடியார் கூட்டத்தின் நடுவில் என்னை இருப்பித்துக் காண்போர் தெய்வம் என்று என்னைக் கருதும்படிச் சிறப்பிக்கின்றார்; என்னே நின் அருட்கொடை இருந்தவாறு. எ.று.
திருவருளாகிய அமுதத்தைக் கண்களால் காணுமாறு கையில் தந்து உண்பித்தான் சிவன் என்பதற்கு, “நின் அருளமுது என் கைவரச் செய்து உண்ணுவித்தாய்” என்று சொல்லுகின்றார். கங்கணம் - கையில் அணியும் வளையல் போல்வதொரு ஆபரணம். சைவர் - சிவசம்பந்தம் பெற்ற சிவஞானிகள். அடியார் கூட்டத்தில் இருக்க வைத்துத் தனது சிவஞானத்தால் ஒளி திகழச் செய்தமை புலப்பட, “தெய்வமென்று வளர்க்கின்றாய்” என்று செப்புகின்றார். சைவம் சிவத்தோடு சம்பந்தமானது என்பர் திருமூலர். (4)
|