4802.

          ஐந்தொழில்நான் செயப்பணித்தாய் அருளமுதம் உணவளித்தாய்
          வெந்தொழில்தீர்ந் தோங்கியநின் மெய்யடியார் சபைநடுவே
          எந்தைஉனைப் பாடிமகிழ்ந் தின்புறவே வைத்தருளிச்
          செந்தமிழின் வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.

உரை:

     ஞான சபையில் நடிக்கின்ற பெருமானே! படைத்தல் முதலிய ஐந்து தொழில்களையும் நான் செய்யுமாறு பணித்தருளித் திருவருள் ஞான வமுதத்தையும் யான் விரும்பி உண்ணுதற் களித்து அருளினாய்; தீயத் தொழில்களைச் செய்யாமல் உயர்ந்தோங்கிய நின்னுடைய உண்மை அடியார்களுடைய சபை நடுவே இருந்து எனக்குத் தந்தையாகிய உன்னைப் பாடி மகிழ்ந்து இன்புறச் செய்து செந்தமிழை யான் ஓதி வளரச் செய்தருளுகின்றாய்; நின் அருட் கொடை இருந்தவாறு என்னே. எ.று.

     திருவருள் ஞானத்தை அருளமுதம் என்று குறித்து அமுதம் என்றதற்கேற்ப, “உணவளித்தாய்” என்று உரைக்கின்றார். உயிர்கட்குத் தீங்கு புரியும் தொழில்களை அறவே செய்யாது உயர்ந்தவர்களை, “வெந்தொழில் தீர்ந்து ஓங்கிய மெய்யடியார்” என்று விளம்புகின்றார். பாடி மகிழ்ந்து இன்புற எனப் பொதுப்படக் கூறியதனால் பாட்டுக்குரிய மொழி இது என்பாராய், “செந்தமிழின் வளர்க்கின்றாய்” என்று தெரிவிக்கின்றார்.

     (6)