4803.

          நான்முகன்நா ரணன்முதலாம் ஐவர்தொழில் நயந்தளித்தாய்
          மேன்மைபெறும் அருட்சோதித் திருவமுதும் வியந்தளித்தாய்
          பான்மையுறு நின்னடியார் சபைநடுவே பதித்தருளித்
          தேன்மையொடு வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்

உரை:

     ஞான சபையில் நடம் புரிந்தருளும் பெருமானே! பிரமன் திருமால் முதலிய ஐவர்கள் செய்யும் தொழில்களை எனக்கு விரும்பியளித்து மேன்மை பெற்ற திருவருட் சோதியாகிய அமுதத்தையும் எனக்கு விரும்பி நல்கினாய்; நல்லொழுக்கமுடைய உன்னுடைய அடியார்கள் கூடிய கூட்டத்தின் நடுவே என்னை இருக்க வைத்து இனிமையோடு என்னை வளர்த்தருளுகின்றாய்; என்னே இவ்வருட் கொடை இருந்தவாறு. எ.று.

     நான்முகன் முதலிய தேவர்கள் ஐவராதலின் அவர்களுடைய படைத்தல் முதலிய தொழில்களை, “ஐவர் தொழில்” என்று அறிவிக்கின்றார். மேன்மை சான்ற பொருளாதலின் அருட் சோதியை, “மேன்மை பெறும் அருட் சோதி” என்று விளம்புகின்றார். பான்மை-ஈண்டு நல்லொழுக்கத்தின் மேற்று. பதித்தல் - இருக்க வைத்தல். தேன்மை - இனிமை. அடியார் சபை நடுவே நிலைபெற இருந்து ஞானானந்தத்தைப் பெற்று ஓங்கச் செய்தலின், “தேன்மையொடு வளர்க்கின்றாய்” என்று செப்புகின்றார்.

     (7)