4804.

          நாயெனவே திரிந்தேனை வலிந்தழைத்து நான்முகன்மால்
          தூயபெருந் தேவர்செயும் தொழில்புரியென் றமுதளித்தாய்
          நாயகநின் அடியர்சபை நடுவிருக்க வைத்தருளிச்
          சேயெனவே வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.

உரை:

     ஞான சபையில் திருக்கூத்தாடி அருளும் பெருமானே! உலகியலில் நாய் போல் அலைந்து வருந்திய என்னைத் தானே வலிய அழைத்துப் பிரமன் திருமால் முதலிய தூய தேவர்கள் செய்கின்ற படைத்தல் முதலிய தொழில்களைச் செய்வாயாக என்றுரைத்து, அவற்றிற்குரிய அருள் ஞானமாகிய அமுதத்தையும் எனக்குத் தந்து அருளினாய்; தலைவனாகிய நின்னுடைய அடியார்கள் கூடிய சபை நடுவில் என்னை இருக்க வைத்துக் குழந்தையை வளர்க்கும் தாய் போல அருளுடன் வளர்த்தருளுகின்றாய்; என்னே நின் அருட் கொடை இருந்தவாறு. எ.று.

     பயனுள்ள நோக்கமின்றி எங்கும் திரிந்தலையும் தமது வாழ்வு இருந்தமை புலப்பட, “நாயெனவே திரிந்தேனை” என்று நவில்கின்றார். தானே மனமுவந்து வந்து அருளினமை பற்றி, “வலிந்தழைத்து” என்று கூறுகின்றார். தூய தவத்தாலும் திருவருள் ஞானத்தாலும் பெருமை சான்றவர்களாதலின் பிரமன் முதலியோரை, “தூய பெருந்தேவர்” என்று போற்றுகின்றார். அடியார் சபை நடுவில் தன்பால் சிறு குற்றமும் நிகழாது காத்தருளுவது பற்றி, “சேய் எனவே வளர்க்கின்றாய்” என்று பாராட்டுகின்றார்.

     (8)