4806. தெருமனைதோ றலைந்தேனை அலையாமே சேர்த்தருளி
அருளொளியால் ஐந்தொழிலும் செயப்பணித்தே அமுதளித்து
மருவியநின் மெய்யடியார் சபைநடுவே வைத்தழியாத்
திருவளித்து வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.
உரை: ஞான சபையில் ஞான நடனம் புரிகின்ற பெருமானே! தெருக்களில் வீடுதோறும் சென்றலைந்து கொண்டிருந்த என்னை அலையாதபடித் திருவருள் நிழலில் சேர்த்தருளி நினது அருளொளியால் படைத்தல் முதலிய ஐந்து தொழிலும் செய்யும்படி உரைத்து அதற்கேற்ப ஞானவமுதத்தையும் தந்து அன்பு பொருந்திய மெய்யடியார்கள் கூடிய சபை நடுவில் என்னை இருத்தித் தொலையாத ஞானச் செல்வத்தையும் எனக்களித்து வளர்த்தருளுகின்றார்; என்னே நின் அருட் கொடை இருந்தவாறு. எ.று.
ஒரு பற்றுக்கோடுமின்றித் தெருக்களில் வீடுதோறும் சென்றலைந்த தனது இளமை வாழ்வை எடுத்தோதுகின்றாராதலால், “தெரு மனைதோறு அலைந்தேன்” என்று செப்புகின்றார். திருவருள் ஞான ஒளியாலன்றி எத்தொழிலும் செய்ய முடியாதாகையால், “அருளொளியால் ஐந்தொழிலும் செயப் பணித்து அமுதளித்து” என்று அறிவிக்கின்றார். உண்மை அன்புடைய பெரியோர்களை, “மருவிய மெய்யடியார்” என்று போற்றுகின்றார. சிவஞானச் செல்வத்தை “அழியாத் திரு” என்று புகழ்கின்றார். (10)
|