100. அனுபவ சித்தி

    அஃதாவது, சிவானுபவம் தமக்கு எய்தினமை அறிந்து வியந்து பாடுதலாம். இதன்கண் வரும் பாட்டுக்கள் பதினொன்றும் அந்தாதித் தொடையில் அமைந்துள்ளன.

கட்டளைக் கலித்துறை

4807.

          அப்பா எனக்கெய்ப்பில் வைப்பாய் இருக்கின்ற ஆரமுதே
          இப்பாரில் என்தன்னை நீயே வருவித் திசைவுடனே
          தப்பாத தந்திரம்மந்திரம் யாவையும் தந்துலகில்
          வெப்பா னதுதவிர்த் தைந்தொழில் செய்ய விதித்தனையே.

உரை:

     அப்பனே! தளர்ச்சிக் காலத்தில் உதவும் பொருளாய் இருக்கின்ற அருமையான அமுதம் போன்றவனே! இவ்வுலகில் என்னை நீயே பிறப்பித்து மனமிசைந்து தவறு படாத ஆகமங்களையும் வேதங்களையும் ஆகிய யாவையும் தந்து உலகியலின் வெம்மை நீங்கிப் படைத்தல் முதலிய ஐவகைத் தொழில்களையும் ஏற்படுத்தி உள்ளாய்; நினது அருட் செயலை என்னென்பது. எ.று.

     அப்பன் - தந்தை. தளர்ச்சி வந்த காலத்தில் பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு வைக்கின்ற பொருள் “எய்ப்பில் வைப்பு” எனப்படும். இதனைச் சேம வைப்பு என்றும் கூறுவதுண்டு. தளர்வுறும் பொழுதெல்லாம் எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அமைந்திருப்பது தோன்ற, “எய்ப்பில் வைப்பாய் இருக்கின்ற ஆரமுதே” என்று விளம்புகின்றார். உலகில் பிறப்பவர் எல்லாம் தத்தம் இச்சையின்படிப் பிறப்பதில்லையாதலால், “என்றன்னை நீயே வருவித்து” என்று சொல்லுகின்றார். உன்னுடைய திருவருளின்படித் தோன்றி வாழ வேண்டி யிருப்பதால், வாழ்வுக்கு உதவி புரியும் ஆகமங்களையும் வேதங்களையும் இறைவன் நல்கி இருப்பது விளங்க, “தந்திரம் மந்திரம் யாவையும் தந்து” என்றும், அவற்றால் உலகியல் வெம்மை தணியும் என்பது புலப்பட, “உலகில் வெப்பானது தவிர்த்து” என்றும் இயம்புகின்றார்.

     (1)