4808.

          விதித்தனை என்னைநின் தன்மக னாக விதித்துளத்தே
          பதித்தனை என்னுட் பதிந்தனை சிற்றம் பலநடமும்
          உதித்தொளிர் பொன்னம் பலநட மும்ஒருங் கேஎனக்கே
          கதித்தழி யாமையும் இன்பமும் கைவரக் காட்டினையே.

உரை:

     என்னை உனக்கு மகனாகப் பிறப்பித்து மகன் என்ற உணர்வும் என் உள்ளத்தில் அமைத்து நீயும் என் உள்ளத்தை உனக்கு இடமாகக் கொண்டாய்; நினக்குரிய சிற்றம்பலக் கூத்தும் அது தோன்றி விளங்குகின்ற பொன்னம்பலத் திருக்கூத்தும் எனக்கு விளங்கக் காட்டி அழியாமையும் அழியாத இன்பமும் எனக்கு மெய்யாக எய்தக் காட்டி அருளினாய். எ.று.

     தன்னைச் சிவனுக்கு மகன் என்கிற உணர்வு தோற்றுவித்து அவ்வுணர்வுதானும் உள்ளத்தே நிலைபெறச் செய்து அந்நினைவு மாறாதபடி இறைவன் தானும் உள்ளத்தில் எழுந்தருளி இருப்பதை உணர்ந்துரைக்கின்றாராதலால், “என்னை நின்றன் மகனாக விதித்து உளத்தே பதித்தனை என்னுட் பதிந்தனை” என்று கூறுகின்றார். பொன்னம்பலத்தில் உள்ளகத்தே ஒளிர்வது ஞான நடம் நிகழும் சிற்றம்பலமாதலின், “சிற்றம்பல நடமும் உதித்து ஒளிர் பொன்னம்பல நடமும் ஒருங்கே எனக்குக் காட்டினை” என்று மொழிகின்றார். அம்பலக்காட்சிகளால் நான் பெற்ற பயன் இதுவென்று கூறுதற்கு, “அழியாமையும் இன்பமும் கைவரக் காட்டினை” என உரைக்கின்றார். கதித்தல் - தோன்றுவித்தல்.

     (2)