4809. காட்டினை ஞான அமுதளித் தாய்நற் கனகசபை
ஆட்டினை என்பக்கம் ஆக்கினை மெய்ப்பொருள் அன்றுவந்து
நீட்டினை என்றும் அழியா வரந்தந்து நின்சபையில்
கூட்டினை நான்முனம் செய்தவம் யாதது கூறுகவே.
உரை: திருவருள் ஞானமாகிய அமுதத்தை எனக்குக் காட்டிப் பின்னர் யான் உண்ணுமாறு அளித்து ஆதரித்த நீ தூய பொற்சபைக்கண் நிகழ்த்தும் நடனத்தை யான் கண்டு இன்புற ஆடி அருளினை; அந்நாள் என்முன் போந்தருளி மெய்ம்மை ஞானப் பொருளை நெடிது கண்டு இன்புற மீளக் காட்டி அருளினாய்; அதனோடு அழியா வரத்தை எனக்குத் தந்து நின்னுடைய ஞான சபையில் என்னைச் சேர்த்தருளினாய்; இத்தகைய நலன்களைப் பெறுதற்கு நான் முற்பிறப்பில் யாது தவம் செய்தேனோ; அதனைக் கூறி யருள்க. எ.று.
முதற்கண் திருவருள் ஞானமாகிய அமுதத்தைக் கண்ணில் காணக் காட்டிப் பின்னர் உண்பித்தமை இனிது விளங்க, “காட்டினை ஞான அமுதளித்தாய்” என்றும், அமுதம் உண்ட சிறப்பால் கனக சபையில் நிகழும் நடனம் தம் பொருட்டே நிகழ்கின்றது என்பது உணரப்பட்டமையும் அதனால் தமக்கு மெய்ம்மை ஞானம் நெடிதறிந்து நுகர்தற்கு வாய்ப்புண்டானமையும் விளக்குவாராய், “நற்கனக சபை ஆட்டினை என் பக்கம் ஆக்கினை மெய்ப்பொருள் அன்று வந்து நீட்டினை” என்று கூறுகின்றார். கனகசபை ஆட்டு - பொற்சபையில் நிகழும் திருநடனம். நீட்டித்தல் - நெடிது நுகர்வித்தல். அழியா வரமுடையார்க் கன்றி ஞான சபையில் கலந்து கொள்ளுதல் இயலாது என்பது பற்றி, “அழியா வரம் தந்து நின் சபையில் கூட்டினை” என்றும், அதுதானும் முன்னைத் தவத்தால் விளைவது என்பது தெரிவித்தற்கு, “நான் முனம் செய்தவம் யாது அது கூறுகவே” என்றும் இசைக்கின்றார். (3)
|