4811. ஆண்டவ னேதிரு அம்பலத் தேஅரு ளால்இயற்றும்
தாண்டவ னேஎனைத் தந்தவ னேமுற்றுந் தந்தவனே
நீண்டவ னேஉயிர்க் கெல்லாம் பொதுவினில் நின்றவனே
வேண்ட அனேக வரங்கொடுத் தாட்கொண்ட மேலவனே.
உரை: என்னை ஆட்கொண்ட பெருமானே! அருள் உள்ளங் கொண்டு அம்பலத்தில் நின்று புரிகின்ற திருக்கூத்தை உடையவனே! என்னை உலகில் பிறப்பித்தவனே! வாழ்வுக்கு வேண்டுவன எல்லாவற்றையும் தந்தருளிய சிவனே! உயிர்கள் எல்லாவற்றிற்கும் மேலானவனே! அம்பலத்தில் நின்று ஆடினவனே! வேண்டிய விடத்து அநேக வரங்களைக் கொடுத்து ஆட்கொண்ட மேலோனே வணக்கம். எ.று.
உலகில் உள்ளவை அனைத்தும் இனிது வாழுமாறு அருள் செய்து ஓங்குபவனாதலால், “ஆண்டவனே” என்று சிவனைப் போற்றுகின்றார். உலகுயிர்கள் உய்தல் வேண்டி நடராசப் பெருமானாய் அருளுருக் கொண்டு கூத்தாடுபவனாதலால், “திருவம்பலத்தே அருளால் இயற்றும் தாண்டவனே” என்று புகழ்கின்றார். தாண்டவம் - கூத்து. உயிர்கள் உலகில் வாழ்தல் வேண்டி வேண்டுவன அனைத்தையும் குறைவறத் தந்த அருளாளனாதலால் சிவனை, “முற்றும் தந்தவன்” என்று மொழிகின்றார். உயிர்கள் எல்லாவற்றிலும் மேம்பட்டவனாதல் பற்றி, “உயிர்க் கெல்லாம் நீண்டவன்” என்று போற்றுகின்றார். வேண்டுவார் வேண்டுவதைக் கொடுப்பவன் என்பது பற்றி, “வேண்ட அநேக வரம் கொடுத்து ஆட்கொண்ட மேலவன்” என்று (5)
|