4812. மேலவ னேதிரு அம்பலத் தாடல் விளக்கும்மலர்க்
காலவ னேகனல் கையவ னேநுதற் கண்ணவனே
மாலவன் ஏத்தும் சிவகாம சுந்தர வல்லியைஓர்
பாலவ னேஎனைப் பாலகன் ஆக்கிய பண்பினனே.
உரை: யாவர்க்கும் மேலானவனே! திருமிக்க அம்பலத்தின்கண் ஆடல் புரிகின்ற தாமரை மலர் போலும் திருவடி உடையவனே! கையில் அனல் ஏந்துபவனே! நெற்றியில் கண்ணை உடையவனே! திருமால் முதலிய தேவர்கள் துதிக்கின்ற அழகிய கொடி போன்ற சிவகாமியாகிய உமாதேவியை ஒரு பங்கிலே உடையவனே! என்னை நினக்கு மகனாக்கிய உயரிய பண்பை யுடையவனே வணக்கம். எ.று.
தனது திருக்கூத்தினால் உலகுயிர்களை இனிது வாழ்விக்கும் சிறப்புடைமை பற்றிச் சிவன் திருவடியை, “அம்பலத் தாடல் விளக்கும் மலர்க்கால்” என்று பாராட்டுகின்றார். பிற தேவர் எவர்க்கும் இல்லாத அழற் கண்ணை நெற்றியில் உடையவனாதல் பற்றி, “நுதற் கண்ணவனே” என்று சிறப்பிக்கின்றார். உமாதேவிக்குச் சிவகாம சுந்தரவல்லி என்பதும் பெயராதலால், “மாலவன் ஏத்தும் சிவகாம சுந்தரவல்லி” என்றும், அவளை மணந்து உலகங்களைப் படைத்தவனாதல் பற்றிச் சிவகாம சுந்தரவல்லியை, “ஓர் பாலவனே” என்று பாராட்டுகின்றார். உமையம்மையைத் தன் மேனியில் ஒருகூறாக உடையவனாதல் பற்றி, “ஓர் பாலவனே” என்றும், மெய்யன்பால் தன்னைப் பரவி யேத்தும் ஞானிகளைத் தன் மக்களாகக் கருதும் பண்புடையவனாதலால், “எனைப் பாலகனாக்கிய பண்பினனே” என்றும் பராவுகின்றார். (6)
|