4813. வாட்டம்எல் லாந்தவிர்ந் தேன்அருட் பேர்ஒளி வாய்க்கப்பெற்றேன்
கூட்டம்எல் லாம்புகழ் அம்பல வாணரைக் கூடப்பெற்றேன்
தேட்டம்எல் லாம்வல்ல சித்திபெற் றேன்இச் செகதலத்தே
ஆட்டம்எல் லாம்விளை யாடுகின் றேன்எனக் கார்சரியே.
உரை: எனக்குண்டாகிய வருத்தமெல்லாம் நீங்கி அருள் ஞானமாகிய பெரிய ஒளி உண்டாகப் பெற்று நல்ல ஞானிகள் கூட்டமெல்லாம் மனமாரப் புகழ்ந்தோதுகின்ற அம்பலவாணனாகிய கூத்தப் பிரானுடைய திருவருள் எய்தப் பெற்றேன்; ஞான யோகிகள் வேண்டி முயல்கின்ற எல்லாம் வல்ல ஞான சித்தியும் எனக்குண்டாகப் பெற்றேன்; அதனால் இந்நிலவுலகின்கண் வாழ்வார் வாழ்வன எல்லாம் பெற்று மகிழ்கின்றேன்; ஆதலால் எனக்கு நிகராவர் யார். எ.று.
பிறப்பிறப்புக்களால் உண்டாகும் வருத்தம் இனித் தமக்கில்லையென மகிழ்கின்றாராதலால் வடலூர் வள்ளல், “வாட்டமெல்லாம் தவிர்ந்தென்” எனவும், அதற்குக் காரணம் திருவருள் ஞானப் பேரொளி தமக்கு எய்தினமை என்பாராய், “அருட் பேரொளி வாய்க்கப் பெற்றேன்” எனவும், சிவஞானிகளின் திருக்கூட்டம் எஞ்ஞான்றும் கூடி இருந்து புகழ் பாடிப் போற்றுதல் விளங்க, “கூட்டம் எல்லாம் புகழ் அம்பலவாணரைக் கூடப் பெற்றேன்” எனவும் கூறுகின்றார். வாட்டம் - பிறப்பிறப்புக்களால் உண்டாகும் மெலிவு. தேட்டம் - தேடிப் பெறப்படும் செல்வம். எல்லாம் வல்ல ஞான சித்தியைப் பெருஞ் செல்மாகப் பேணுகின்றாராதலால், “தேட்ட மெல்லாம் வல்ல சித்தி” என்று செப்புகின்றார். ஆட்ட மெல்லாம் விளையாடுகின்றேன் என்றது உலகியல் வாழ்க்கை வகைகளை எஞ்ஞாது வாழ்தல் விளங்க, எல்லோரும் ஓரோர் வகையில் குறையுடையவராதலால் தமக்கு அக் குறை இன்மையை உணர்த்துவதற்கு, “எனக்கு ஆர் சரி” என இறுமாப்புகின்றார். சரி - நிகர். (7)
|