4815. எனையான் மதித்துப் புகல்கின்ற தன்றிஃ தெந்தைபிரான்
தனையான் மதித்திங்குப் பெற்றநல் வாழ்வது சாற்றுகின்றேன்
வினையான் மெலிந்த மெலிவைஎல் லாம்விரைந் தேதவிர்த்துத்
தனையான் புணர்ந்திடச் சாகா வரத்தையும் தந்தனனே.
உரை: என் உணர்வையே பொருளாகக் கொண்டு இதனை நான் சொல்லுகின்றேனில்லை; இது எனக்கு எந்தையும் தலைவனுமாகிய சிவபிரானை யான் பெறற்கரும் பெரும் பொருளாக எண்ணி அவனால் தரப்பெற்ற நல்வாழ்வாகும் என்ற உலகறிய உரைக்கின்றேன்; அஃதாவது, யான் செய்த வினைவகைகளால் எனக்குண்டாகிய தளர்ச்சி எல்லாவற்றையும் விரைந்து போக்கி அப்பெருமானை யான் அடைதற் கேற்ற சாகா வரத்தையும் எனக்குத் தந்தருளினான். எ.று.
யான் ஒன்றை உறுதியாக உரைப்பேனாயின் அது தவறு படுதற்கும் இடமுண்டாதலால் யான் கூறுவது வெறும் தற்போதத்தால் அன்று என வற்புறுத்தற்கு, “எனை யான் மதித்துப் புகல்கின்றதன்று இஃது” என்று உரைக்கின்றார். சிவனையல்லது வேறு கடவுள் இல்லை என்று எண்ணிப் போற்றி வாழ்கின்றேனாதலால் அவனது அருளுரையாக உரைக்கின்றேன் என்பாராய், “எந்தை பிரான்தனை யான் மதித்து இங்கு பெற்ற நல்வாழ்வு என்று சாற்றுகின்றேன்” என மொழிகின்றார். எல்லாத் துன்பங்கட்கும் அவற்றால் விளையும் மனமெய்கள் மெலிவுக்கும் காரணம் செய்வினை என்பது உலகறிந்த செய்தியாதலின், “வினை யான் மெலிந்த மெலிவை எல்லாம்” எனவும், இறைவன் பொருள்சேர் புகழ் புரிந்தார் மாட்டு இருள்சேர் இருவினையும் சேரா என்று சான்றோர் கூறுதலால், “மெலிவை எல்லாம் விரைந்தே தவிர்த்துத் தனையான் புணர்ந்திட” எனவும் எடுத்தோதுகின்றார். சாகா நிலையை யுடைய பரம்பரனைச் சார்பவர் தாமும் அந்நிலையைப் பெற வேண்டுதலின், “சாகா வரத்தையும் தந்தனன்” என உரைக்கின்றார். (9)
|