101. பொன் வடிவப் பேறு
அஃதாவது, சிவமாந் தன்மையைப் பெறுதல். சிவத்திற்கு திறம் பொன்மையாதலால் சிவமாந் தன்மை எய்தும் ஆன்மாவுக்கும் அஃது உளதாவதால் “பொன் வடிவப் பேறு” என்று புகழ்கின்றார்.
நேரிசை வெண்பா 4818. அருட்பெருஞ் சோதி அபயம் அபயம்
பொருட்பெருஞ் சோதிப் புணைதந் - திருட்பெருங்கார்
அள்ளற் கடல்கடத்தி அக்கரைமேல் ஆனந்தம்
கொள்ளற் கபயங் கொடு.
உரை: அருட்பெருஞ் சோதி ஆண்டவனே! எனக்கு அபயம் அருள்க; எளியவனாகிய எனக்கு மெய்ப்பொருளாகிய நினது பெருமை பொருந்திய ஞானஒளி தெப்பமாகத் தந்து இருள் நிறைந்த பெரிய கருமையான சேறு நிறைந்த பிறவிப் பெருங்கடலைக் கடப்பித்து அக்கரையாகிய சிவானந்தப் பெருநிலையை அடைந்து இன்பம் நுகர்தல் பொருட்டு அச்சமில்லாத உள்ளத்தைக் கொடுத்தருள்க. எ.று.
அருட் பெருஞ் சோதி ஆண்டவனுடைய அருளைப் பெறும் முயற்சிக்கு இடையூறாக நிலவும் பிறப்பிறப்புக்களுக்கு அஞ்சும் அச்சமிகுதி புலப்பட, “அபயம் அபயம்” என முறையிடுகின்றார். மெய்ப் பொருள் பேற்றிற்குச் சிவஞானப் பேரொளி சிறந்த துணையாதலால், “பொருட் பெருஞ் சோதி புனை தந்து” என்று புகல்கின்றார். மலவிருள் காரணமாக அறிவு மறைப்புண்டுப் பிறப்பிறப்பென்னும் பெருங்கடல் அழுந்திக் கிடக்கின்றமை புலப்பட, “இருட் பெருங் காரள்ளல் கடல் கடத்தி” என்றும், சிவானந்த வீடு பிறப்பிறப்பில்லாப் பேரின்ப நிலையமாதலின், “அக்கரை மேல் ஆனந்தம்” என்றும், அதனைப் பெறுதலை விட உயிர்கட்கு உறுதி வேறின்மையில், “ஆனந்தம் கொள்ளற்கு அபயம் கொடு” என்றும் வேண்டுகின்றார். அபயம் என வந்தவற்றுள் முன்னைய இரண்டும் அச்ச மிகுதியையும் பின்னையது துணையாதலையும் குறக்கின்றன. (1)
|