4819. ஆரமுதம் தந்தென்னுள் அச்சமெலாம் தீர்த்தருளிச்
சீரமுத வண்ணத் திருவடிகண் - டார்வமிகப்
பாடி உடம்புயிரும் பத்திவடி வாகிக்கூத்
தாடிக் களிக்க அருள்.
உரை: சிவபெருமானே! உன்னுடைய அருமையான திருவருள் ஞானமாகிய அமுதத்தை அளித்து என் உள்ளத்தில் நின்று வருத்தும் அச்சங்கள் அனைத்தையும் போக்கியருளிச் சிறந்த அமுதமயமான நின்னுடைய திருவடிகளைக் கண்டு அன்பு மேலிட வாயாரப் பாடி என் உடம்பும் உயிரும் பத்தி வடிவம் உற்று ஆனந்தக் கூத்தாடி யான் மகிழுமாறு அருள் புரிக. எ.று.
திருவருள் ஞானத்தை அமுதம் என்னும் வழக்குப் பற்றி, “ஆரமுதம் தந்து” என்றும், ஞான வமுதம் பெற்றாலன்றிப் பிறப்பிறப்புக்களின் அச்சம் தீராதாகலின், “அமுதம் தந்து அச்சமெலாம் தீர்த்தருளி” என்றும் கூறுகின்றார். அமுத வண்ணத் திருவடி - அமுத மயமான திருவடிகள்; அமுதம் சுரக்கின்ற திருவடிகள் எனினும் பொருந்தும்; திருவடிக் காட்சி அன்பால் பாடும் திறமும் பத்திப் பொலிவும் தரும் என்பது பற்றி, “ஆர்வ மிகப் பாடி உடம்புயிரும் பத்தி வடிவாகிக் கூத்தாடிக் களிக்க அருள்” என்று உரைக்கின்றார். (2)
|