4820.

          இடர்தொலைந்த ஞான்றே இனைவும் தொலைந்த
          சுடர்கலந்த ஞான்றே சுகமும் - முடுகிஉற்ற
          தின்னே களித்திடுதும் என்நெஞ்சே அம்பலவன்
          பொன்னேர் பதத்தைப் புகழ்.

உரை:

     என்னுடைய நெஞ்சமே! துன்பங்கள் தொலைந்த பொழுதே வருத்தங்கள் அனைத்தும் கெட்டொழிந்தன; மேலும் ஞான ஒளி கலந்த பொழுதே ஞான சுகமும் விரைந்து வந்தடைந்தன; இப்பொழுது நான் நன்கு மகிழலாம்; ஆதலால் அம்பலவாணனாகிய சிவனுடைய பொன்னிறங் கொண்ட திருவடியைப் புகழ்ந்து பரவுவாயாக. எ.று.

     இடர் - துன்பம். இனைவு - வருத்தம். சுடர் என்றது ஞான ஒளியை. சுகமானது ஞானப் பேற்றால் உளதாகும் இன்பம். பொன்னிறங் கொண்ட சிவபெருமானுடைய திருவடியும் பொற்பாதமாதலால் அதனை, “அம்பலவன் பொன்னேர் பதம்” என்று போற்றுகின்றார்.

     (3)