4822. உள்ளக் கவலையெலாம் ஓடி ஒழிந்தனவே
வள்ளற் பெருஞ்சோதி வாய்த்தனவே - கள்ளக்
கருத்தொழிய ஞானக் கருத்தியைந்து நாதன்
பொருத்தமுற்றென் உள்ளமர்ந்த போது.
உரை: கள்ள நினைவுகள் பொருந்திய மனப்பண்பு நீங்கவும் சிவஞானக் கருத்து உள்ளத்தில் சிவலோக நாதனாகிய சிவனுடைய திருவருள் போந்து என் நெஞ்சின்கண் அமர்ந்தபொழுது வள்ளலாகிய பெருமானுடைய அருட் பெருஞ் சோதி எனக்கு வாய்த்த படியால் என் மனத்தில் உண்டாகும் கவலை முற்றும் கெட்டொழிந்தன. எ.று.
உள்ளக் கவலை - மனக்கவலை. வள்ளல் - சிவபெருமான். அருட் பெருஞ் சோதியையே வள்ளற் பெருஞ் சோதி என்று குறிப்பதாக உரைப்பதும் பொருந்தும். நெஞ்சில் கள்ள நினைவும் செயலில் வஞ்சகமும் நீங்கினாலன்றி ஞானக் கருத்து வந்து பொருந்தாதாதலின், “கள்ளக் கருத்தொழிய ஞானக் கருத்தியைந்து நாதன் பொருத்தமுற்று என் உள்ளமர்ந்தபோது” என்று உரைக்கின்றார். (5)
|