4823. ஊன உடம்பே ஒளிஉடம்பாய் ஓங்கிநிற்க
ஞான அமுதெனக்கு நல்கியதே - வானப்
பொருட்பெருஞ் சோதிப் பொதுவில் விளங்கும்
அருட்பெருஞ் சோதி அது.
உரை: சிதாகாசத்தில் பெரும் பொருளாய் விளங்கும் சிவ பரம்பொருளும் அம்பலத்தில் அருட் பொருளாய் விளங்கும் பெருஞ் சோதியுமாய் விளங்கும் பரசிவம், ஊனாலாகிய என் உடம்பு ஒளி உடம்பாய் ஓங்கி விளங்குமாறு ஞானமாகிய அமுதத்தை எனக்குத் தந்தருளியது காண். எ.று.
வானப் பொருள் - ஞான வானமாகிய சிதாகாசத்தில் ஞானப் பெரும் பொருளாய்ப் பெரிய ஞானச் சோதியாய் விளங்கும் பரம்பொருள். பொது - பொன்னம்பலம். அருட் பெருஞ் சோதியாகிய அது எட்டியும் கட்டியும் காட்டொணாத பரஞ்சோதி என்றற்கு, “அருட்பெருஞ் சோதி அது” என்று சொல்லுகின்றார். அப்பரம்பொருள் அளிக்கும் ஞானமாகிய அமுது என் ஊனுடம்பை ஒளி உடம்பாக்கி ஓங்கச் செய்கிறது என்பது கருத்து. (6)
|