4824. எல்லாம் செயவல்லான் எந்தையருள் அம்பலவன்
நல்லான் எனக்குமிக நன்களித்தான் - எல்லாரும்
கண்டுவியக் கின்றார் கருணைத் திருவமுதம்
உண்டுவியக் கின்றேன் உவந்து.
உரை: எல்லாம் செயல் வல்லவனாகிய எனக்கு எந்தையும் அருளுருவினனுமாகிய அம்பலவாணன் எனக்கு நலன் செய்பவனாய் நன்ஞானத்தை மிகவும் அளித்தருளினான்; அவனது அருள் ஞானமாகிய அமுதத்தை நான் விருப்புடன் உண்டு அவன் திருவருளை வியப்பேனாக, உலகவர் எல்லாரும் என்னைக் கண்டு ஆச்சரியப்படுகின்றார்கள். எ.று.
வரம்பில் ஆற்றலுடையவன் என்பது பற்றி, “எல்லாம் செயவல்லான்” என்று சிவனைக் குறிக்கின்றார். இன்ன தன்மையன் என்றறிய ஒண்ணாத பரமன் கூத்தப் பிரானுடைய குருமூர்த்தியாய் அம்பலத்தில் காட்சி தருகின்றானாதலின், “எந்தையருள் அம்பலவன்” என்று புகழ்கின்றார். திருவருள் ஞானத்தை மிகுதியும் அளித்தான் என்பதற்கு, “எனக்கு மிக நன்களித்தான்” என்று சொல்லுகின்றார். இறைவன் அருளிய திருவருள் ஞானத்தைக் “கருணைத் திருவமுதம்” என்று குறிக்கின்றார். ஏனைய எல்லாரும் பெறலாகாத அருள் ஞான அமுதத்தைத் தாம் பெற்றமையால் தமது உருவம் பொன்மயமாவது கண்டு உலகவர் மருண்டு வியப்புறுகின்றார் என்பாராய், “எல்லாரும் கண்டு வியக்கின்றார்” என எடுத்தோதுகின்றார். (7)
|