4825.

          ஏசா உலகவர்கள் எல்லாரும் கண்டுநிற்கத்
          தேசார் ஒளியால் சிறியேனை - வாசாம
          கோசரத்தின் ஏற்றிக் கொடுத்தான் அருளமுதம்
          ஈசனத்தன் அம்பலவ னே.

உரை:

     ஈசனும் எனக்கு அப்பனும் அம்பலவாணனுமாகிய சிவ பெருமான் போற்றும் அன்புடைய உலகத்தவர் எல்லாரும் கண்டு வியக்கத் தனது சிவஞானப் பேரொளியால் சிறுமை உடையவனாகிய என்னை வாக்கு மனங்களுக்கு அப்பாற்பட்ட ஞானப் பெருநிலையில் உயர்த்தித் தனது அருளமுதத்தை எனக்கு வழங்கி அருளினான். எ.று.

     ஏசுதல் - தூற்றுதலாதலால் ஏசா உலகவர் என்பதற்கு அன்பால் போற்றுகின்ற உலக மக்கள் என்று பொருள் உரைக்கப்பட்டது. தேசு - ஒளி; ஆகவே தேசார் ஒளியாவது சிவஞானப் பேரொளி என்று பொருள் கூறப்பட்டது. வாக்கு மனங்களுக்கு எட்டாதது வாசாம கோசரம் எனப்படுகிறது. அது மனத்திற்கும் எட்டாமை பற்றி வாக்கு மனங்களுக்கு அப்பாற்பட்டதெனப் பொருள் கூறப்பட்டது.

     (8)