4827. ஒப்புயர்வொன் றில்லா ஒருவன் அருட்சோதி
அப்பனெலாம் வல்லதிரு அம்பலத்தான் - இப்புவியில்
வந்தான் இரவி வருதற்கு முன்கருணை
தந்தானென் னுட்கலந்தான் தான்.
உரை: தனக்கு ஒப்பாரும் மிக்காரும் ஒருவருமில்லாத தனிப் பரமனும், அருட்சோதியையுடைய அப்பனும், எல்லாம் செயல் வல்ல அழகிய அம்பலவாணனுமாகிய சிவபெருமான், உலகில் பொழுது விடிவதற்குள் என்பால் வந்து தனது கருணையாகிய அமுதத்தைத் தந்து என்னுட் கலந்து கொண்டான்; அவனது அருள் இருந்தவாறு என்னே. எ.று.
தனக்கு ஒப்பதும் உயர்ந்ததுமாகிய ஒன்றுமில்லாத ஒரு முதல்வன் என்றற்கு, “ஒப்புயர்வு ஒன்றில்லா ஒருவன்” என வுரைக்கின்றார். வரம்பில் ஆற்றலுடைமையை வற்புறுத்தற்கு, “எல்லாம் வல்ல திருவம்பலத்தான்” என இயம்புகின்றார். இரவுப் பொழுதில் கனவின்கண் தோன்றி அருள் ஞானம் தந்தமை கண்டாராகலின், விழித்தபோது காணாமையால், “என்னுள் கலந்தான் தான்” என்று இசைக்கின்றார். (10)
|