4828.

          ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
          சாதல் ஒழித்தென்னைத் தானாக்கிப் - பூதலத்தில்
          ஐந்தொழில்செய் என்றே அருட்சோதிக் கோலளித்தான்
          வெந்தொழில்போய் நீங்க விரைந்து.

உரை:

     சொல்லி முடியாத ஒப்பற்ற தோழமை உடையவனும் அடியார் உள்ளத்தின்கண் எழுந்தருளுபவனுமாகிய சிவபெருமான் எனக்குச் சாகா நிலைமையை நல்கி என்னையும் சிவமாக்கி இப்பூவுலகில் படைத்தல் முதலிய ஐந்து தொழில்களையும் செய்க என்று சொல்லி, அருட் சோதியாகிய தனது செங்கோலை எடுத்து உலகில் வெவ்விய தீய தொழில்கள் எல்லாம் விரைந்து உய்ய ஆட்சி புரிக எனத் தந்தருளினான்; அவனது திருவருட் பெருமைதான் என்னே. எ.று.

     சிவபெருமான் எண்ணி ஓதற்கரிய தோழமைப் பண்புடையவன் என்ற கருத்து விளங்க, “ஓத உலவா ஒரு தோழன்” என்றும், சிவத் தொண்டர்களின் சிந்தையையே கோயிலாகக் கொண்டவன் என்பது விளங்க, “தொண்டருளன்” என்றும் உரைக்கின்றார். பிறப்பிறப்பாகிய பந்தம் நீங்கினாலன்றிப் பசுகரணங்கள் சிவகரணங்களாதல் இல்லாமையால், “சாதல் ஒழித்து என்னைத் தானாக்கி” என்று சொல்லுகின்றார். தனது அருள் ஞானத்தைக் கோலாக உருவகம் செய்வது பற்றி, “அருட்சோதிக் கோல்” என அறிவிக்கின்றார். குற்றமான தீய தொழில்களை, “வெந்தொழில்” என விளம்புகின்றார்.

     (11)