4829. ஒளவியந்தீர் உள்ளத் தறிஞரெலாம் கண்டுவக்கச்
செவ்வியசன் மார்க்கம் சிறந்தோங்க - ஒவ்வி
விரைந்துவந்தென் உட்கலந்து மெய்யேமெய் யாக
நிரந்தொன்றாய் நின்றான் நிலத்து.
உரை: பொறாமை முதலிய குற்றங்கள் இல்லாத மனத்தை யுடைய ஞானவான்கள் எல்லாரும் கண்டு மகிழவும் செம்மை சான்ற சன்மார்க்க நெறி மிக்கு விளங்கவும் சிவபிரான் மனமிசைந்து என்பால் நிலவுலகத்தில் விரைந்து வந்து என்னுட் கலந்து என்னுடம்பே தனக்கு உடம்பாக முறையுறக் கொண்டு நின்றருளினான். எ.று.
ஒளவியம் - பொறாமை. ஒளவியமாகிய குற்றம் எல்லாக் குண நலன்களையும் அழிக்கும் இயல்பினதாகலான் அஃது இல்லாத ஞானிகளை, “ஒளவியந்தீர் உள்ளத் தறிஞர்” என்று உரைக்கின்றார். செம்மையால் சிறந்து விளங்குவதுபற்றி, “செவ்விய சன்மார்க்கம்” என்று சிறப்பிக்கின்றார். ஒவ்வுதல் - இசைதல். தூலமும் சூக்குமமும் காரணமுமாய் நிரல்பட ஒன்றி நிற்றல் பற்றி, “நிரந்து ஒன்றாய் நின்றான்” என்று கூறுகின்றார். என் உடம்பையே தன் உடம்பாகக் கொண்டான் என்பது “தன்னைக் கண்ட என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணமாகிய ஈசன்” என்று சேரமான் பெருமாள் உரைப்பது நினைவு கூரத்தக்கது. (12)
|