4830. சோதிப் பிழம்பே சுகவடிவே மெய்ஞ்ஞான
நீதிப் பொதுவே நிறைநிதியே - சோதிக்
கடவுளே மாயைஇருள் கன்மமிருள் எல்லாம்
விடவுளே நின்று விளங்கு.
உரை: சோதிப் பிழம்பாகவும், சுகமே வடிவாகவும், மெய்ம்மை சான்ற ஞான நீதிக்கு நிலையமாகவும், சிற்றம்பலமாகவும், நிறைந்த செல்வமாகவும், சோதி உருக்கொண்ட கடவுளாகவும் நின்ற பெருமானே! மாயையும் நல்வினை தீவினை என்ற இரண்டு கன்மங்களும் மூலமலமாகிய இருளும் என்னை விட்டு நீங்குமாறு என் உள்ளத்தில் நிலையாய் நின்று விளங்குக. எ.று.
பிரமமாகிய பரம்பொருளே சோதிப் பிழம்பு என்று சொல்லுதலால் சிவனை, “சோதிப் பிழம்பே” என்று சொல்லுகின்றார். மெய்ம்மை ஞானத்தால் நிலவுகின்ற நீதி அனைத்தும் தனக்கு உருவமாகக் கொண்டதாதலால் சிவத்தை, “மெய்ஞ்ஞான நீதி” என்றும், சோதிப் பொருட்கெல்லாம் சோதியாகத் துலங்குவது பற்றிப் பரம்பொருளை, “சோதிக் கடவுளே” என்று சொல்லுகின்றார். மாயை என்பது தனு கரண புவன போகங்கட்கு மூலகாரணமாகிய மாயா மலம். இருள் என்பது அறியாமையைச் செய்கின்ற ஆணவமாகிய மலம். இறைவன் நின்று விளங்குமிடத்து இருள் வடிவினவாகிய மாயை, கன்மம், மலம் ஆகிய மூன்றும் நில்லாவாகலின், “மாயை இருகன்மம் இருள் எல்லாம் விட வுளே நின்று விளங்கு” என்று வேண்டுகிறார். விடுதல் - நீங்குதல். (13)
|