4831.

          துன்பமெலாம் தீர்ந்த சுகம்எல்லாம் கைதந்த
          அன்பரெலாம் போற்ற அருள்நடஞ்செய் - இன்பன்
          அருட்பெருஞ்சிற் சோதிதிரு அம்பலத்தான் வேதப்
          பொருட்பெருஞ்சித் தென்னுட் புகுந்து.

உரை:

     மெய்யன்பராயினார் எல்லாரும் போற்றித் துதிக்கத் திருவருள் நடனத்தைச் செய்கின்ற இன்ப மயமானவனும், அருள் ஞானப் பெருமை கொண்ட ஞானச் சோதி உருவனும், அம்பல வாணனும், வேதப் பொருளாகிய பெருஞான உருவானவனுமாகிய சிவபெருமான் என் உள்ளத்தே புகுந்து கொண்டதினால் என்னைச் சூழ்ந்திருந்த துன்பங்கள் எல்லாம் ஒழிந்தன; ஞானம் நல்கும் சுகமனைத்தும் எனக்குக் கைவந்துள்ளன; இனி எனக்கு யாது குறை. எ.று.

     மெய்யன்பர்களாகிய சிவஞானிகள் துதித்துப் போற்றியதற் கிசைந்து அம்பலத்தில் திருநடனம் செய்கின்றான் சிவன் என்பது பற்றி, “அன்பரெலாம் போற்ற அருள் நடனம்செய் அம்பலத்தான்” என்று புகழ்கின்றார். இன்ப உருவினனாதல் பற்றிச் சிவனை, “இன்பன்” என்றும், அருட்பெருஞ் சோதியாகிய அப்பரமன் ஞானமே உருவாயவனாதலால், “அருட் பெருஞ் சிற்சோதி” என்றும் போற்றுகின்றார். வேதப் பரம்பொருளாகிய பிரமம் பெருஞ் சித்துருவாய்த் திகழ்தலின், “வேதப் பொருட் பெருஞ் சித்து” என்று விளம்புகின்றார். ஆகமங்கள் கூறும் சிவ பரம்பொருளையே வேதங்கள் பிரமம் என்று சுட்டுதலால், “வேதப் பொருட் பெருஞ் சித்து” என்று கூறப்படுகிறது. பிரமமாகிய சிவன் என் உள்ளத்தில் புகுந்து கொண்டதினால் என்னைப் பிணித்திருந்த பிறவித் துன்பங்களெல்லாம் நீங்கின என்பாராய், “துன்பமெலாம் தீர்ந்த” என்றும், பிறவா இன்பப் பேறு எய்தினமை புலப்பட, “சுகமெல்லாம் கைதந்தன” என்றும் இயம்புகின்றார். கைதருதல் - கைவரப் பெறுதல்.

     (14)