102. தத்துவ வெற்றி
அஃதாவது, மனம், புத்தி, சித்தம், அகங்காரம், மாயை, மாமாயை, மூலப் பிரகிருதி, கன்மம், மூலமலம், திரோதானம் முதலிய தத்துவங்களையும், தூக்கம், பயம், கோபம், காமம், குரோதம், உலோபம் முதலிய தீய குணங்களையும் உருவகப்படுத்தித் தம்மின் நீங்குமாறு வடலூர் வள்ளல் வெருட்டுகின்றாராம்.
இப்பகுதிக்கண் வரும் பாட்டுக்கள் திருநாவுக்கரசு சுவாமிகள் திருவாரூர் இறைவன் திருமுன் நின்று “பொய் மாயப் பெருங்கடலில் புலம்பா நின்ற புண்ணியம் காள் தீவினை காள் திருவே” எனத் தொடங்கும் திருப்பாசுரங்களால் வருத்துகின்ற குணஞ் செயல்களை உருவக வாய்ப்பாட்டில் நிறுத்திக் கடிந்துரைக்கும் அருள் உரைகளை நினைப்பித்தல் காண்க.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 4834. திருவளர்பேர் அருளுடையான் சிற்சபையான் எல்லாம்
செய்யவல்ல தனித்தலைமைச் சித்தன்எல்லாம் உடையான்
உருவமுமாய் அருவமுமாய் உபயமுமாய் அலவாய்
ஓங்கும் அருட்பெருஞ்ஜோதி ஒருவனுண்டே அவன்றான்
பெருமையினால் எனையீன்றான் நான்ஒருவன் தானே
பிள்ளைஅவன் பிள்ளைஎனப் பெரியர்எலாம் அறிவார்
இருமையுறு தத்துவர்காள் என்னைஅறி யீரோ
ஈங்குமது துள்ளல்எலாம் ஏதும்நட வாதே.
உரை: திருவிளங்கும் பேரருள் உடையவனும், ஞான சபைத் தலைவரும், எல்லாம் செய்ய வல்ல ஒப்பற்ற தலைமைச் சித்தனும், எல்லாவற்றையும் உடையவனும், உருவமாகவும் அருவமாகவும் அறிவுருவமாகவும் இரண்டும் அல்லவாகவும் ஓங்குகின்ற அருட்பெருஞ் சோதி ஆண்டவனுமாகிய ஒருவன் உண்டன்றோ; அப்பெருமான் தான் தன்னுடைய பெருமைக்கு ஏற்ப என்னைப் பெற்றவன்; நான் ஒருவனே அவனுடைய பிள்ளை என்பதைப் பெரிய ஞானிகள் எல்லாரும் அறிவர்; மாறுபட்ட தத்துவ ஞானிகளே என்னை நீவிர் அறிவீர் போலும்; இனி உங்களுடைய தத்துவ போராட்டம் யாவும் என்னிடம் சிறிதும் செல்லாது காண்மின். எ.று.
எல்லாச் செல்வங்களிலும் தலையாய செல்வமாதலின் இறைவனுடைய திருவருளைப் “பேரருள்” என்று புகழ்கின்றார். ஞான சபைத் தலைவனாதலின் சிவபிரானைச் “சிற்சபையான்” என்று சிறப்பிக்கின்றார். சித்சபை என்பது சிற்சபை என வந்தது. வரம்பில் ஆற்றலும் எல்லாருடைய சிந்தையில் தங்குதலும் உடையவனாதலின், “எல்லாம் செய்ய வல்ல தனித் தலைமைச் சித்தம்” என்று புகழ்கின்றார். எல்லா உலகங்களையும் தனக்கு உடைமையாகவும் எல்லா உயிர்களையும் தனக்கு அடிமையாகவும் உடையவனாதலால், “எல்லாம் உடையான்” என்று போற்றுகின்றார். உருவம் நான்கும் அருவம் நான்கும் உருவருவம் ஒன்றும் ஆக ஒன்பது உருவ பேதங்கள் உடையனாதலும், எவ்வகை உருவமும் இல்லாதவனாதலும் அவனுக்கு இயல்பாதலின், “உருவமுமாய் அருவமுமாய் உபயமுமாய் அல்லவாய் ஓங்கும் அருட்பெருஞ் சோதி” என்று உரைக்கின்றார். இருள் நீக்கி அருள் ஞானப் பேரொளியைத் தருவதுகொண்டு, “ஓங்கும் அருட்பெருஞ் சோதி” என்று புகல்கின்றார். இறைவன் என்ற பொருள் வகையில் அவன் ஒருவன் தவிர வேறு பொருள் இல்லை என்பதுபட, “ஒருவன் உண்டே” என்று ஓதுகின்றார். அவ்வொருவனுக்கும் தனக்குமுள்ள முறைமையைப் புலப்படுத்தற்கு, “அவன்தான் பெருமையினால் என்னை யீன்றான்; நான் ஒருவனே பிள்ளை” என்று இயம்புகின்றார். எனக்கும் அவனுக்கும் உள்ள இந்த முறைமை உலகத்து ஞானிகள் அனைவரும் நன்கு அறிந்தது என்பாராய், “அவன் பிள்ளை எனப் பெரியரெலாம் அறிவார்” என்று கூறுகின்றார். சமயங்கள் தோறும் தத்துவங்கள் வேறுபடுதலால் அச்சமய ஞானிகளை, “இருமையுறு தத்துவர்காள் என்னை அறியீரோ” என்றும், தத்துவக் கூறுகளைப் பலபடப் பேசி ஆரவாரம் செய்யும் தத்துவப் போராட்டம் இனி வேண்டா என்றற்கு, “ஈங்கு உமது துள்ளல் எலாம் ஏதும் நடவாது” என்றும் உரைக்கின்றார். துள்ளல் - ஆரவாரம். நடவாது என்பது செல்லாது. (1)
|