4836. பன்முகஞ்சேர் மனம்எனும்ஓர் பரியாசப் பயலே
பதையாதே சிதையாதே பார்க்கும்இடம் எல்லாம்
கொன்முகங்கொண் டடிக்கடிபோய்க் குதியாதே எனது
குறிப்பின்வழி நின்றிடுநின் குதிப்புநட வாது
என்முனம்ஓர் புன்முனைமேல் இருந்தபனித் துளிநீ
இம்மெனும்முன் அடக்கிடுவேன் என்னைஅறியாயோ
பின்முன்என நினையேல்காண் சிற்சபையில் நடிக்கும்
பெரியதனித் தலைவனுக்குப் பெரியபிள்ளை நானே.
உரை: பலவேறு வகையில் உருக் கொண்டு மயக்க வல்ல மனம் எனப்படும் ஒரு கண்டோர் பரிகசித்தற்குரிய சிறுவனே; பதற்றமுற்று உன் தன்மையைக் கெடுத்துக் கொள்ளாதே; பார்க்குமிடமெங்கும் அச்சம் தோன்றுமாறு அடிக்கடி போய்க் குதித்து ஆடுவதைக் கைவிடுக; என் கருத்தின்படி நிற்பாயாக; உன்னுடைய துள்ளலும் துடிப்பும் என்னிடம் செல்லாது; என் எதிரில் ஒரு புல் நுனியில் தங்கும் சிறு பனித்துளியாவாய்; இம் என்னும் முன் உம்மை அடக்கி ஒடுக்கி விடுவேன்; என்னுடைய ஆற்றலை நீ அறிவாய்; மேலும் முன்னே அடங்குவோம் பின்பு அடங்குவோம் என்று நினைக்க வேண்டாம்; ஞான சபையில் திருக்கூத்தாடுகின்ற பெரிய ஒப்பற்ற தலைவனாகிய சிவபெருமானுக்குரிய பிள்ளைகளில் நான் ஆற்றலால் பெரியவனாகிய பிள்ளை என அறிக. எ.று.
பன்முகம் - பலவேறு வகை; பலவேறு உருவமுமாம். கண்டார் பரிகசிக்கத் தக்க தோற்றமும் செயலும் உடைய சிறுவனைப் “பரியாசப் பயல்” என்பது உலக வழக்கு. பதறுதல் - துடித்தல். சிதைதல் - கெடுதல். கொன்முகம் - அச்சம் பயக்கும் தோற்றம்; பயனில்லாத தோற்றம் எனினும் அமையும். குறிப்பு - கருத்து. மனத்தினது புன்மை புலப்படுத்தற்கு, “என் முனம் ஓர் புல் முனை மேல் இருந்த பனித்துளி நீ” என்று இகழ்கின்றார். பின்னர் அடங்குவோம் முன்னே முயலுவோம் என்றெல்லாம் எண்ணிக் கெடுதல் வேண்டாம் என அறிவுறுத்தற்கு, “பின்முன் நினையேல் காண்” எனக் கூறுகின்றார். காண் - எள்ளற் குறிப்பில் வந்த முன்னிலை (3)
|